Friday, February 08, 2013

உயிர் வாழ உணவு அவசியம்



விவசாயத்தால் விருது...! சாதித்த பட்டதாரி பெண் !!
திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த திருமதி அமலராணி அவர்கள் சிறந்த சாதனை ஒன்றை அமைதியாக செய்து ...முடித்திருக்கிறார். வேளாண் அதிகாரிகளின் மூலம் இவரது சாதனை அரசாங்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இதோ இன்று ஜனாதிபதியிடம் இருந்து கிருஷிகர்மான் விருதையும் ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசும் பெற்றுவிட்டார். அரசாங்கத்தின் பார்வையில் பட்ட இவரை பற்றி நாம் தெரிந்துகொள்வது காலத்தின் கட்டாயம் தான், ஆம் உயிர் வாழ உணவு அவசியம் என்பதால்...!!

உணவு வேண்டும் ஆனால் அதை உண்டு பண்ணுபவனை பற்றி நமக்கு அக்கறை இல்லை.உலக மக்கள் பசியாற வெயிலிலும் மழையிலும் பாடுபட்டு உழைக்கும் உழவனின் உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் இது போன்ற விருதுகள் !


விவசாயத்தின் மீதுள்ள காதலால் கணவர் மருத்துவத் தொழிலை கவனிக்க, இவர் வயலுக்கு வந்து விட்டார். ஒரு மகனும் ஒரு மகளும் மருத்துவ துறையிலும், இன்னொரு மகள் பிளஸ் 1ம் பயிலுகிறார். விவசாயத்தொழிலை தனது ஜீவனாக பாவிக்கும் இவர் ஆங்கில இலக்கியம் படித்தவர்.

சாதனை

விவசாயத்தில் அதிக மகசூலை பெற்று சாதிப்பவர்களுக்கு மத்திய வேளாண்மைத்துறை சார்பில் கிருஷிகர்மான் விருது வழங்கபடுகிறது. அது இந்த வருடம் இவருக்கு கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டில் தான் திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் சாகுபடி செய்து இருக்கிறார் அவரது சீரிய முயற்சியின் பலனாக அதிக அளவாக ஏக்கருக்கு 18 ஆயிரத்து 143 கிலோ மகசூல் கிடைத்தது. விருதை குறிவைத்து இவர் விவசாயம் பார்க்கவில்லை, அவ்வபோது வேளாண் அதிகாரிகளின் ஆலோசனைகளை கேட்டு அதன் படி வேலை பார்த்திருக்கிறார்.

விருது பற்றி எதுவும் தெரியாத நிலையில் இவரது வயலில் விளைந்திருந்த கதிர்களை பார்த்த அதிகாரிகள் ஆச்சர்யத்துடன் அதன் அளவை குறித்து சென்றிருக்கிறார்கள் . அதற்கடுத்த வாரத்தில், தான் ஒரு சாதனை செய்திருக்கிறோம் என்று தகவல் கிடைக்க பெற்றிருக்கிறார் .ஜனாதிபதியின் கையால் விருதையும் வாங்கிவிட்டார்


இதில் இன்னொரு மகிழ்ச்சி என்னவென்றால் தேசிய அளவில் தமிழகத்தில் தான் ஒரு எக்டேரில் அதிக நெல் சாகுபடி செய்து உள்ளனர். எனவே இதை பாராட்டி தமிழகத்துக்கு 2 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

இவரை மத்திய வேளாண் மந்திரி சரத்பவார், மத்திய வேளாண்துறை செயலாளர், தமிழக விவசாயத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, நெல்லை கலெக்டர் சி.சத்தியமூர்த்தி போன்ற பலரும் கௌரவித்து பாராட்டி உள்ளனர். வேளாண்மையில் இன்னும் அதிகமாக சாதிக்க வேண்டும் என்கிற ஆசை, வாய்ப்பு நிறைய இருக்கிறது என்கிறார் இவர்.

நெல் தவிர தென்னந்தோப்பு, காய்கறிகள் சாகுபடி, கரும்பு சாகுபடி போன்றவற்றையும் ஆர்வமுடன் செய்து வருகிறார். பெரிய அளவில் பூசணியை விளையவைத்து உள்ளூர் மக்களை ஆச்சர்யப்படுத்துகிறார்.

விவசாய தொழிலை கௌரவ குறைச்சலாக நினைக்கும் பலர் இருக்கும் நாட்டில் தான் இவரை போன்றவர்களும் இருக்கிறார்கள். விவசாய நிலபரப்பு குறைவதை பற்றியா ஆதங்கம் இவருக்கு நிறைய இருக்கிறது.

அதை குறித்து இவ்வாறு கூறுகிறார்...

" விளை நிலங்கள் வீடுகளாவது தடுக்கப்பட வேண்டும். மூணு ஆண்டுகள் தொடர்ந்து ஒரு நிலம் தரிசாக கிடந்தால் அதை வீட்டு மனையாக்கி விற்க நினைக்கிறார்கள். விவசாய நிலத்தை தரிசாக போட அரசு அனுமதிக்கக்கூடாது. இதில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். ஒரு புறம் மக்கள் தொகை பெருகுகிறது, மறுபுறம் விவசாயம் சுருங்குகிறது. இப்படியே போனால் பஞ்சத்தின் கொடுமையை மக்கள் நேரில் பார்க்க கூடிய காலம் விரைவில் வந்து விடும்.

"இன்னும் சில ஆண்டுகள் கழித்து நகரங்களுக்கு சென்றவர்கள் எல்லாம் கிராமங்களை தேடி ஓடி வரும் நிலை ஏற்படும்...அப்போது விவசாயத்துக்கு அப்படி ஒரு மவுசு கிடைக்கும்...வேலை இல்லாத படித்த ஆண்களும் பெண்களும் ஏர் பிடிக்கும் காலம் வந்தே தீரும் !!

அதற்கு உதாரணமாக இந்த ஆண்டில் மழை பொய்த்து போனதை கூறலாம். வரும் ஆண்டிலும் இதே போன்று நிகழ்ந்தால் உணவு பஞ்சம் வந்து விடும். அப்போது ஒரு கிலோ அரிசி விலை 100 ரூபாய்க்கு கூட விற்கலாம். இதே போல் மற்ற விவசாய பொருட்களின் விலையும் உயரும். நல்ல விலை கிடைப்பதால் ஏராளமானவர்கள் மீண்டும் கழனிக்கு வருவார்கள்... தரிசு நிலங்கள் பசுமையாக மாறும். மீண்டும் பசுமை புரட்சி ஏற்படும்"

'பெண்களுக்கு ஏற்ற தொழில் விவசாயம் தான், குடும்பத்தை கவனிக்கவும் நேரம் கிடைக்கும், தேவைக்கு அதிகமாகவே வருமானமும் கிடைக்கும்' என்று பெண்களுக்கு ஒரு யோசனையும் சொல்கிறார்.

வேறு எந்த தொழிலை போலில்லாமல் இதில் உடல் உழைப்பு இருப்பதால் உடல் ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக, உற்சாகமான மனதுடன் நீடித்த இளமையுடன் இருக்கலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம் .

காலத்தின் கட்டாயம்

விவசாயத்தில் இறங்குவது அவசியம் என்பதை உணர்ந்து இருக்கும் விளை நிலங்களை விற்காமல் இயன்றவரை விவசாயத்தில் ஈடுபட முயற்சி எடுப்போம். தெரியாத தொழில் என்று தயங்காமல் தெரிந்தவர்களின் ஆலோசனைகளை பெற்று தைரியமாக இறங்கலாம். விவசாயத்தை பொருத்தவரை வேளாண் அதிகாரிகள் நமக்கு உதவ தயாராகவே இருக்கிறார்கள், அவர்களை அணுகி தேவையான ஆலோசனைகளை பெற்றுகொள்ளலாம்.

நிலங்கள் இல்லாதவர்கள் பிறரிடம் குத்தகை பெற்று விவசாயம் செய்கிறார்கள்...தண்ணீர் தேவைக்கு நீர் மேலாண்மை திட்டம் உதவுகிறது. அறிவியல் தொழில்நுட்ப உதவியோடு செயல்படுத்தபடுகிறது. சொட்டுநீர் பாசனம், நுண நீர்ப் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் போன்ற பாசன முறைகளின் மூலம் குறைந்த நீரிலும் நிறைவான உற்பத்தி பெறமுடியும். விவசாயம் செய்யபோகும் நம் நிலத்தின் மண்ணையும், நீரையும் பரிசோதனை செய்வது நல்லது. வேளாண் அதிகாரிகளை அணுகினால் இவற்றை குறித்த விளக்கங்களை கூறி உதவுவார்கள்.

மேலும்

இயற்கை விவசாயம் செய்தால் பூச்சி மருந்து ,உரம் போன்றவற்றின் தேவை கணிசமாக குறையும். நெல் தவிர கம்பு, சோளம், உளுந்து,பயறு போன்ற தானியங்களை விளைவிக்கலாம். காய்கறி தோட்டம் போட்டால் கூட நல்லது. ஏதோ ஒரு வகையில் இயற்கையுடன் நம்மை பிணைந்து கொள்வதின் மூலம் நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும். அதே நேரம் சுற்றுப்புறமும் சுகாதாரமாக மேன்மையுறும்.

ஆர்வம் உழைப்பு இருந்தால் விவசாயத்தில் வெற்றி பெறலாம். இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டு பொருளாதார ரீதியாக பயன் பெற்று நம் நாட்டிற்கும் பயனுள்ளவர்களாவோம். நாமும் ஈடுபட்டு நம்மை சேர்ந்தவர்களையும் ஈடுபட செய்வோம்.

உறுதியுடன் முயன்றால் பசுமை உலகம் சாத்தியம் !!

வாழ்க விவசாயம்!

No comments: