Tuesday, January 28, 2014

பெண்மையின் மௌனம்

வரன் பார்த்து
வாழ்க்கை வரமாகும்
நேரத்தில் ...,
பெண்மையின் மௌனம்
'சம்மதம் '!

பிறந்த வீடு பிரிந்து
புகுந்த வீடு
புகும் வேளையில்...,
பெண்மையின் மௌனம்
'பிரிவு '!

முதன்முதலாய்
முகம் பார்த்து பேசும்
மணவாளனுக்கு .......
பதில் பேசாத ,
பெண்மையின் மௌனம்
'நாணம் '!

இதுவரை
பழகிடாத எதார்த்தத்தை
பிடித்தவருக்காக
ஏற்றுக்கொள்ளும்போது ,
பெண்மையின் மௌனம்
'தியாகம்' !

சொல்லித் தீர்த்துவிட
வேண்டிய விஷயத்தை ...,
சொல்லமுடியாமலே போன
சூழ்நிலையில் .....
பெண்மையின் மௌனம்
'கண்ணீர் '!

எதிர்பார்ப்புகள்
ஏமாற்றங்களான போது ,
பெண்மையின் மௌனம்
'வேதனை '!

ஏங்கித்தவித்த விஷயமொன்று
எதிர்பார்க்காமல் கிடைக்கும்
தருணத்தில் ...
பெண்மையின் மௌனம்
'களிப்பு '!

உண்மைக்கோ ,
பெண்மைக்கோ
கலங்கமென்ற
சமயத்தில் .....
பெண்மையின் மௌனம்
'கோபம் '!

தாவணி உடுத்திய
கன்னியவள் ...
தாய்மையென்னும் கண்ணியத்தை
உணரும் போது ....,
பெண்மையின் மௌனம்
'பேரானந்தம் '!

வெளிவரும் வார்த்தைகளே
அர்த்தப்ப்படுமானால் ...,
ஆயிரம் சூழ்நிலைகளில்
வெளிப்படாத .....
பெண்மையின் மௌனம்
"பொக்கிஷமே" !!!....

பிரியா கங்காதரன்

தூக்கணாங் குருவிக்கூடு


Monday, January 20, 2014

பொங்கல் நல்வாழ்த்து!

தமிழனுக்கும் ஒரு நாளாம்
தரணியிலே சிறந்த நாளாம்

ஏட்டுக் கல்வி படிச்சிபுட்டும்
ஏர் ஓட்டும் சின்ன ராசா..

ஒஞ்சி போற வயசுலயும்
ஓயாமா வெதைக்கிற என் செல்ல ஆத்தா..

மாராப்பு இடுப்புல சொருகி
வயக்காட்டு வெயிலுல வெளுத்த அக்கா

அத்தனை ஒறவுக்கும் நன்றி சொல்ல
வந்தோமைய்யா..

பொங்குற பானை போல
வாழ்க்கையும் தான் பொங்கனுமையா..

ஏழேழு தலைமுறைக்கும் சோறு போட
நீங்க வாழனும்மைய்யா...

சாமியத்தான் கும்பிட்டிட்டு வாழ்த்து சொல்ல
வந்தேனய்யா.....
 
கவிதாயினி சத்யா

பொங்கல் நல்வாழ்த்து!

பசுவுக்கே தெரியாமல்
பாலைத் திருடி வயிறு நிரப்புகிறோம்;
பரிகாரமாய் பசுவதைக்கெதிராக
குரல் கொடுக்கிறோம்!

ஆற்றுக்கே தெரியாமல்
இரவோடிரவாக மண்ணைத் திருடுகிறோம்;
ஏரி வயிறெரிய வளைத்துப்போட்டு
வீடுகட்டி ஏறி நிற்கிறோம்;
பரிகாரமாய் பூமி பூஜை செய்கிறோம்!

படுத்துறங்கும் மலையறியாமல்
பாறைபாறையாக பிளந்தெடுக்கிறோம்;
கடலுக்கே தெரியாமல்
கடற்கரை கனிமத்தைச் சுரண்டுகிறோம்;
ஆற்று நீரையும் பட்டா போட்டு
முதலாளிகளுக்கு தாரை வார்க்கிறோம்;
ஆற்றுநீரை மாசாக்கி, காசாக்கி
சுத்தம், சுகாதாரம் பாடமெடுக்கிறோம்!

யானைக்கு காடு சொந்தமில்லை,
நெல்லுக்கு வயல் சொந்தமில்லை,
தென்னைக்கு தோப்பு சொந்தமில்லை,
உயிர் உருக்கி பயிர் வளர்த்தும்
வானம் பார்த்த பூமியாக
மண்ணை நேசிக்கும் விவசாயி நிலை!

பகட்டான உடையில்லை,
ஆடம்பர அணிகளில்லை,
வரப்புமேட்டிலேயே வாழ்ந்தாலும்
மேட்டுக்குடி செருக்கில்லை,
உச்சிவெயில் பார்த்தே
நேரத்தைச் சொல்லிடும்
நேர்த்தியின்னும் குறையவில்லை;
அத்தனையும் விளைவித்தாலும்
விலை நிர்ணயிக்கும் உரிமையில்லை;
இருந்தும்
வயல்வெளிவிட்டு விலகிட மனமின்றி
துயரனைத்தும் பொறுத்து
பூமியாள்வோரின் திருவிழா!
நம்மாழ்வார் போற்றும்
நம் உழவர்களின் திருவிழா!

வாழிய உழவு! வாழிய உழவர்!
வாழ்க நற்றமிழர்!
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்து!


Gauthaman DS Karisalkulaththaan

இன்னமுதப் பொங்கலிடு!!!

வரப்புயர !
நீர் உயர.....
நீர் உயர!
நெல் உயர...
நெல் உயர!
குடி உயர......
உழவர் குடி உயர!!

செந்நெல் விதை போட்டு,
நாற்று நட்டு,
பயிர் வளர்த்து,
கதிர் அறுத்து,
புதுப்பானை அடுப்பேற்றி....
இஞ்சியொடு மஞ்சளும்....
வளைத்துக்கட்டி,
முக்கனியும் நறுந்தேனும்...
நயமுடனே படைத்தும்....
இங்கே ..

செங்கதிரோனின்
செய் நன்றி தனை நினைந்து...
இன்னமுதப்
பொங்கல் இடும் நாள் பொழுதில்...
எத்திக்கும் வாழும்....
ஏர் உழு உழவர்தம்
குலம் வாழ....
பார் எங்கும் வாழ்..
தமிழர் நாமும் வாழ்த்து
சொல்வோம்.

தைத்திரு நாள் நல்வாழ்த்து !!!!
வாழ்க நலவாழ்வு !!!!
 

 பாரதி கண்ணம்மா

Wednesday, January 08, 2014

பொங்கல்...


தமிழர் திருநாள் இது
தமிழர்களின் வாழ்வை
வளமாக்கும் திருநாள்...
உழைக்கும் உழவர்களின்
களைப்பை போக்கி
களிப்பில் ஆழ்த்தும்
உற்சாகப்படுத்தும் திருநாள்...
உறங்கும் பெண்களை
அதிகாலையிலே எழுந்து
கோலம் போடவைக்கும்
கோலாகலமான திருநாள்...
மிரட்டி வரும் காளைகளை
விரட்டி அடக்கும் வீர திருநாள்...
பழைய எண்ணங்களை அவிழ்த்து
புதிய சிந்தனைகளை புகுத்தும்
புதுமையான திருநாள்...
என் உடன்பிறவா தமிழ் மக்கள்
அனைவருக்கும் என்
உற்சாகமான பொங்கல்
நல்வாழ்த்துக்கள்...
                                                           கூடல்

புது கதைவி பொங்கல்!

வெள்ளை மன மாரியம்மா
விரும்பி நீயும் வாடியம்மா
கள்ளி கட்டு மூலையிலே
கலை கோயில் வைப்போம் வாடியம்மா
பள்ளிகளில் கல்வியினை போல்
படைப்போமே நாடி வாம்மா
சொல்லில் புது பொங்கலையும்
சூடாமணியின் பாலினையும்
கண்ணகியின் காவியத்தை
கணக்காக பாகெடுத்து
நெய்தல் நில கோமகளின்
நிறைவான நெய்யெடுத்து
நேசங்கொண்ட கொண்ட ஏலாதியில்
நேர்த்தியான மணமெடுத்து
வாழ்க்கை நெறி வள்ளுவத்தின்
வயிறார நாம் படைக்க
பங்கெடுக்க மக்களெல்லாம்
பண்ணிசைத்து கூடிவிட்டார்
வெள்ளை மன மாரியம்மா
விரும்பி நீயும் வாடியம்மா
ஆழி கொண்ட இலக்கணத்தை
ஆற்றலில் நாம் சென்று
தோணி பிடித்து தொல்காப்பியம்
துணையினால் நாம் வென்றாலும்
சேரில் ஊன்றும் நாற்றினைபோல்
செந்தமிழும் வேர் பிடிக்க
வெள்ளை மன மாரியம்மா
விரும்பி நீயும் வாடியம்மா
பக்தி நெஞ்சில் பழுத்த நானூரில்
புறம் கூறி புகழையெல்லாம் போற்றி நிற்போம்
பொறுத்திருந்து அகம் மலர்ந்து
புனைந்த குறுந்தொகையில் காதல் கொண்டு
மரபிருந்து - கவி
மனம் நுழைந்து
புதுக்கவிதையை மழலையென
பொங்கல் வைப்போம்
வெள்ளை மன மாரியம்மா
விரும்பி நீயும் வாடியம்மா!

                                                    ராஜ்திலக்

மௌனமாக பேசுகிறேன்..

கொஞ்சம் நேரம்
பேசுவாளா என்று
என் மனம் துடிக்கிறது
ஆனால்...
அவள் மௌனமாகவே
இருந்து என்னை
ஊமை ஆக்கி விட்டாள்
நானும் மௌனமாகவே
பேசுகிறேன் அவளுடன்...!

இதயவன்

ஒருதலைக் காதல்

காதலுக்காக நீயும் இல்லை
உன்னை காதலிக்காமல்
நானும் இல்லை
ஏனோ மறுக்கிறது
என் மனம்
இது வேண்டாம் என்று
தினம் தினம்
பார்வையால் பரிசளித்தது
உன் கண்கள்
புன்னகையை மறுத்ததில்லை
உன் உதடுகள்
நீ பேச காத்திருக்கிறேன்
                                                  மகேஷ்வரன்