Monday, January 20, 2014

பொங்கல் நல்வாழ்த்து!

பசுவுக்கே தெரியாமல்
பாலைத் திருடி வயிறு நிரப்புகிறோம்;
பரிகாரமாய் பசுவதைக்கெதிராக
குரல் கொடுக்கிறோம்!

ஆற்றுக்கே தெரியாமல்
இரவோடிரவாக மண்ணைத் திருடுகிறோம்;
ஏரி வயிறெரிய வளைத்துப்போட்டு
வீடுகட்டி ஏறி நிற்கிறோம்;
பரிகாரமாய் பூமி பூஜை செய்கிறோம்!

படுத்துறங்கும் மலையறியாமல்
பாறைபாறையாக பிளந்தெடுக்கிறோம்;
கடலுக்கே தெரியாமல்
கடற்கரை கனிமத்தைச் சுரண்டுகிறோம்;
ஆற்று நீரையும் பட்டா போட்டு
முதலாளிகளுக்கு தாரை வார்க்கிறோம்;
ஆற்றுநீரை மாசாக்கி, காசாக்கி
சுத்தம், சுகாதாரம் பாடமெடுக்கிறோம்!

யானைக்கு காடு சொந்தமில்லை,
நெல்லுக்கு வயல் சொந்தமில்லை,
தென்னைக்கு தோப்பு சொந்தமில்லை,
உயிர் உருக்கி பயிர் வளர்த்தும்
வானம் பார்த்த பூமியாக
மண்ணை நேசிக்கும் விவசாயி நிலை!

பகட்டான உடையில்லை,
ஆடம்பர அணிகளில்லை,
வரப்புமேட்டிலேயே வாழ்ந்தாலும்
மேட்டுக்குடி செருக்கில்லை,
உச்சிவெயில் பார்த்தே
நேரத்தைச் சொல்லிடும்
நேர்த்தியின்னும் குறையவில்லை;
அத்தனையும் விளைவித்தாலும்
விலை நிர்ணயிக்கும் உரிமையில்லை;
இருந்தும்
வயல்வெளிவிட்டு விலகிட மனமின்றி
துயரனைத்தும் பொறுத்து
பூமியாள்வோரின் திருவிழா!
நம்மாழ்வார் போற்றும்
நம் உழவர்களின் திருவிழா!

வாழிய உழவு! வாழிய உழவர்!
வாழ்க நற்றமிழர்!
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்து!


Gauthaman DS Karisalkulaththaan

No comments: