Monday, October 27, 2014

தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005

நமது மத்திய, மாநில அரசுகள் அனைத்தும் மக்கள் வரிப் பணத்தில்தான் இயங்கி வருகின்றன. நாம் அனைவருமே அரசுக்கு வரி செலுத்துகிறோம். பிச்சைக்காரர் கூட ஒரு தீப்பெட்டியை காசு கொடுத்து வாங்கும்போது, அதில் ஒரு பகுதி அரசுக்கு வரியாக மறைமுகமாகச் செல்கிறது. அரசு என்பது மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே இயங்குகிறது.

மக்களின் வரிப்பணம்தான் அரசின் பணம். ஆனால், இந்த வரிப்பணம் முறையாகச் செலவிடப்படுகிறதா என்று மக்கள் கண்காணிக்கிறார்களா? அரசுக்குப் பணம் கொடுப்பதால் மக்கள்தான் எஜமானர்கள். எனவே, ஒவ்வொரு மனிதருக்கும் தான் கொடுக்கும் பணம் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்று கேட்க முழு உரிமை உண்டு. ஆனால், செய்கிறோமா? இல்லை. அந்த உரிமையைப் பயன்படுத்தக் கூடாது என்பதல்ல காரணம். மாறாக, அந்த உரிமையைப் பயன்படுத்துவதற்கான சட்டபூர்வமான, நிர்வாக ரீதியான வழி எதுவும் இல்லை என்பதே காரணமாகும்.

தகவல் அறியும் உரிமை குறித்து 1976-ம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாகக் கூறிவிட்டது. ராஜ்நாராயண் என்பவர் உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராகத் தொடுத்த ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தகவல் அறியும் உரிமையை வலியுறுத்தியுள்ளது. அத்தீர்ப்பின் சாராம்சம்: அரசியல் சாசனத்தின் 19 (1)-வது பிரிவின்படி குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை உண்டு; மேலும் அதற்குரிய தகவல்களைப் பெறவும் முழு உரிமை உண்டு. காரணம், நமது நாடு ஜனநாயக நடைமுறையில் இயங்கும் அமைப்பாகும்.

ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். தங்கள் மீது எத்தகைய நிர்வாகம் நடத்தப்படுகிறது என்பதை அறியவும் தாங்கள் செலுத்திய வரிப் பணம் எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும் முழு உரிமை உள்ளது. இதைத்தான் அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது”.

இத்தனை இருந்தாலும் தகவல் அறியும் உரிமைக்காக ஒரு புதிய சட்டம் தேவையா? ஆம், தேவைதான். காரணம், தற்போதைய நடைமுறைப்படி ஓர் அலுவலகத்துக்குச் சென்று, விவரம் அறிந்துகொள்வதற்காக உரிய ஆவணத்தைக் கேட்டால், எந்த அதிகாரியும் தர மாட்டார். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட தகவலை எங்கே, யாரிடம் பெற விண்ணப்பிக்கலாம்? அந்த உரிமையைப் பெறக் கட்டணம் எவ்வளவு? எத்தனை நாளுக்குள் அத்தகவல் வந்து சேரவேண்டும்? குறிப்பிட்ட தகவலைத் தர அதிகாரி மறுத்துவிட்டால், அவருக்கு என்ன தண்டனை தரலாம்? என்ற விவரங்களை அறியலாம்.

இச்சட்டத்தை அரசு கொண்டு வருவதற்கு மக்கள் இயக்கம்தான் காரணம். ராஜஸ்தானில் 1990-ம் ஆண்டு ஓர் அரசுத் திட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளிகளுக்கு தினக் கூலி ரூ.22 என நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பிட்ட ஒரு தொழிலில் அவர்களுக்குத் தினமும் ரூ.11 மட்டுமே தரப்பட்டது. ஆனால், உண்மையில் சம்பளப் பதிவேட்டில் ரூ.22 தினக் கூலி எனப் பதிவு செய்யப்பட்டு வந்தது. தங்களுக்கு ஊதியம் குறைவாகத் தரப்பட்டது குறித்து தொழிலாளிகள் நிர்வாகத்திடம் கேட்டதற்கு, அத்தொழிலாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றும் அதனால்தான் ஊதியம் குறைத்துத் தரப்பட்டது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதில் திருப்தி அடையாத தொழிலாளர்கள் வெகுண்டெழுந்து ஊதியங்களைப் பதிவு செய்யும் பதிவேட்டைக் கேட்டனர். அதை மறுத்த நிர்வாகம் அத்தகைய ஆவணங்கள் அரசு ரகசியம் என்று கூறினர்.

அங்கேதான் தொழிலாளர்களுக்குக் கை கொடுக்க வந்தார் அருணா ராய். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து மக்கள் சேவைக்காக பதவியைத் துறந்து “விவசாய தொழிலாளர்கள் சங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார். அவரது அமைப்புடன் மக்கள் இணைந்து தொடர்ந்து போராடியதை அடுத்து, 2005 ஆம் ஆண்டு அக்டோபரில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டம் 68 நாடுகளில் நடைமுறையில் உள்ளது. எனினும், இந்திய சட்டத்தில் உள்ள பிரிவுகள் மிகச் சிறந்தவை. அதன்படி, யார் வேண்டுமானாலும் அரசிடம் எந்தத் தகவலையும் கேட்டுப் பெறலாம். எந்த ஆவணத்தையும் ஆய்வு செய்யலாம். அதன் நகலைப் பெற்றுக் கொள்ளலாம். எந்தப் பணியையும் நேரடியாகப் பார்வையிடலாம். எந்தப் பணி நடைபெற்றாலும், அதில் பயன்படுத்தப்படும் பொருளின் தரம், விலை ஆகியவை குறித்த விவரங்களைக் கேட்டுப் பெறலாம்.

மக்களுக்கு இந்தத் தகவலை, சம்பந்தப்பட்ட அதிகாரி 30 நாளில் அளிக்கவேண்டும். தவறினால், கெடு தேதியைக் கடந்த ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250 என அபராதம் செலுத்த வேண்டும். அது மட்டுமல்ல. பெற்ற தகவலில் திருப்தி இல்லை என்றால், மேல் முறையீடு செய்யலாம். இதற்காகத் தகவல் உரிமை ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கப்பட வேண்டும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின் சில பணிகள் சரியாக இயங்கியதற்கு இரு சம்பவங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

தில்லியில் வசிக்கும் குடிசைவாசிப் பெண் திரிவேணி. அவரது குடும்ப மாத ஊதியம் ரூ.500 தான். அவரது குடும்பத்தில் நான்கு பேர் உள்ளனர். ஏழைமக்களுக்கான ரேஷன் அட்டை திரிவேணிக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் கோதுமை கிலோ ரூ.2, அரிசி கிலோ ரூ.3 என்ற சலுகை விலையில் கடைகளில் வாங்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது. ஆனால், ஓராண்டாக அவர் கடையில் வாங்கச் சென்றால், சரக்கு இல்லை என்றே பதில் வந்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர் வழக்குத் தொடர்ந்தார். ஆவணங்களைக் கேட்டார். தன் பெயரில் உணவு விநியோகிக்கப்பட்டதா என்று கேட்டார்.

ஆவணங்களில் அவர் பெயரில் மாதந்தோறும் அரிசியும், கோதுமையும் விநியோகிக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர் கையெழுத்திட வேண்டிய இடத்தில் கைநாட்டு வைக்கப்பட்டிருந்தது. இத்தனைக்கும் திரிவேணிக்கு எழுதவும் படிக்கவும் தெரியும்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் கடைக்காரரின் உரிமம் பொதுவாக ரத்து செய்யப்படும். இதை அறிந்த கடைக்காரர் அஞ்சினார். திரிவேணியைத் தேடிச் சென்று, தான் செய்த தவறை மறந்து மன்னிக்குமாறு கெஞ்சினார்.

இவ்வாறு போராடி வென்ற திரிவேணிக்கு அரிசியும் கோதுமையும் தற்போது தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இதைப் போன்றே உதய் என்பவரும் ஜெயித்துக் காட்டியுள்ளார்.

தில்லியில் வசந்த் கஞ்ச் என்ற இடத்தில் வசிக்கும் அவர் ஐ.ஐ.டி. எதிரில் உள்ள ஒரு சாலை பத்தே நாளில் அவசரகோலத்தில் போடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவ்வாறு குறுகிய காலத்தில் போடப்படும் சாலை எந்த தரத்தில் இருக்கும் என்று அவர் சந்தேகப்பட்டார். தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் உதவியை நாடினார்.

அது தொடர்பான ஆவணங்களைப் பார்வையிடக் கோரினார். அங்கு பயன்படுத்தப்பட்ட தார், மணல், கற்களின் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், அந்த சாலையை அமைத்த செயல் பொறியாளர் அவரிடம் வந்து, சாலை முழு அளவில் பழுதுபார்க்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பின் உதய் அந்த சாலையைப் பார்வையிட்டார். அவர் சுட்டிக் காட்டிய குறைபாடுகள் அனைத்தும் களையப்பட்டன.

ஊழல், முறைகேடு இல்லாத உலகம் இருக்கும் என்று யாரும் கனவு காண இயலாதுதான். ஆனால், ஒவ்வொரு தனி நபரும் அநீதியை எதிர்த்துப் போராடும் ஆற்றலைப் பெற முடியும். அதைத் தகவல் அறியும் உரிமை சட்டம் நிரூபித்துள்ளது.

2005 ஆம் வருடத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இந்திய அரசு இயற்றியுள்ளது. 2005 அக்டோபர் 13ஆம் தேதியிலிருந்து இது அமலுக்கு வருகிறது. பொது நிறுவனங்களின் செயல்பாடுகள் மறைவேதும் இல்லாமல் பொதுமக்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியவும், அந்த நிறுவனங்களின் செயல் பாட்டுக்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பொறுப்பேற்க வைக்கவும், பொதுமக்கள் அந்த நிறுவனங்களின் செயல் பாட்டினை அறிந்து கொள்ள வழிவகை செய்யும் சட்டம் தான் இச்சட்டம். இச்சட்டத்தின் பிரிவுகள் 8,9 இன் கீழ் சில வகையான தகவல்கள் வெளியிடப் படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. தலைமைப் பொதுத்தகவல் அலுவலர் ஒருவரையும் நியமிக்க இச்சட்டம் வழிவகுக்கிறது.

அரசு மற்றும் அரசிடம் உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து, தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்திய அரசு 2005ம் ஆண்டு கொண்டு வந்தது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும் அக்.25ம் தேதி, தகவல் அறியும் உரிமை சட்ட தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

2004 டிச., மாதம் பார்லிமென்ட்டில் இச்சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 2005 மே 11ல் லோக்சபாவிலும், மே 12ல் ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜூன் 15ம் தேதி குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார். ஜூன் 21ல் அரசிதழில் வெளியிடப்பட்டு, அக்.12ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும், அறிய விரும்பும் தகவல்களை பெற உரிமை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் வெளிப்படையாக இருப்பதும், பொதுமக்கள் யார் கேட்டாலும் அவர்களுக்கு தகவல்களை தெரிவிப்பதும் அரசின் கடமை என இதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தகவல்களை தாமாக முன் வந்து தெரிவிக்கவும் இச்சட்டம் வழி செய்கிறது.

எப்படி பெறலாம்:

தகவலை பெற விரும்புவோர் அது குறித்து எழுத்து மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்போர் பெயர், முகவரி மற்றும் கையெழுத்துடன் அனுப்பப்படும் விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். அவசரத் தகவலுக்கு 48 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, போர்யுக்தி போன்ற சில பிரிவின் கீழ்வரும் தகவல்களை அரசு தெரிவிக்க தேவையில்லை. பார்லிமென்ட், சட்டசபைக்கோ மறுக்கப்படாத தகவல்கள், தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பது இச்சட்டத்தின் நோக்கம்.

நடவடிக்கை:

குறித்த நேரத்தில் தகவல் தராமலும், தவறான தகவலை தருவதும் குற்றம். இதன்படி தவறு செய்யும் அரசு அதிகாரிகளை தண்டிக்கவும், அபராதம் வழங்கவும் மத்திய, மாநில தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. இச்சட்டத்தை குடிமக்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் லஞ்சம், ஊழலை தடுக்கலாம். பயனற்ற தகவல்களை பெறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அரசு எந்திரம் சரியாக செயல்படவும், அதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கவும் இச்சட்டம் வழி வகுக்கிறது.

1. “ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்துபெற்றுக்கொள்ளலாம்.

2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன ? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி (இவை இரண்டும் கட்டாயமில்லை) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.

3. சகோதரர்களே, மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.

4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.

5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.

6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.

7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட என்ன என்ன கேள்விகள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல்களை கேட்டுப்பெறலாம்?

எடுத்துக்காட்டாக:

1. நமது மாவட்ட MP அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (5 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?

2. அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் (2 கோடி ரூபாய்) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது?

3. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? எப்பொழுது பணிகள் நிறைவுபெறும்?

4. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான ‘ பசுமை வீடுகள் திட்டம்’ , இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம் (முந்தைய ஆட்சியில் ‘ நமக்கு நாமே திட்டம்), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும்? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

5. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் (தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள்) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது? இப்பயனை பெற யாரை அணுகுவது? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

6. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது? இப்பயனை பெற யாரை அணுகுவது? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும்? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

7. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு ? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன? பாதுகாப்பானவையா? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா? இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகுமா?

8. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

9. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது?

10. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா?

11. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா?

12. நமதூரில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் எப்பொழுது ஆரம்பமாகும்? இப்பணிகள் எப்பொழுது நிறைவு பெரும்? இப்படி நீங்களும் இதே போல் என்னற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.

மாநில அரசு தகவல்கள் பெற :
-
திரு. எஸ். இராம கிருட்டிணன், (இ. ஆ. ப, ஓய்வு)
மாநில தலைமை தகவல் ஆணையர், காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி, (வானவில் அருகில்) பழைய எண் : 273, புதிய எண் : 378 , அண்ணா சாலை, (தபால் பெட்டி எண் : 6405) தேனாம்பேட்டை, சென்னை – 600 018 தொலைப்பேசி எண் : 044 – 2435 7581 , 2435 7580 Email : sic@tn.nic.inhttp://www.tnsic.gov.in/contacts.html
Tamil Nadu Information Commission

No comments: