Monday, October 27, 2014

திருப்புகழ் 24 அம்பொத்த விழி (திருச்செந்தூர்)



தந்தத் தனனத் தந்தத் தனனத்
தந்தத் தனனத் ...... தனதானா

......... பாடல் .........

அம்பொத் தவிழித் தந்தக் கலகத்
தஞ்சிக் கமலக் ...... கணையாலே

அன்றிற் குமனற் றென்றற் குமிளைத்
தந்திப் பொழுதிற் ...... பிறையாலே

எம்பொற் கொடிமற் றுன்பக் கலனற்
றின்பக் கலவித் ...... துயரானாள்

என்பெற் றுலகிற் பெண்பெற் றவருக்
கின்பப் புலியுற் ...... றிடலாமோ

கொம்புக் கரிபட் டஞ்சப் பதுமக்
கொங்கைக் குறவிக் ...... கினியோனே

கொன்றைச் சடையற் கொன்றைத் தெரியக்
கொஞ்சித் தமிழைப் ...... பகர்வோனே

செம்பொற் சிகரப் பைம்பொற் கிரியைச்
சிந்தக் கறுவிப் ...... பொரும்வேலா

செஞ்சொற் புலவர்க் கன்புற் றதிருச்
செந்திற் குமரப் ...... பெருமாளே.

சொல் விளக்கம் 

அம்பு ஒத்த விழித் தந்தக் கலகத்து அஞ்சிக் கமலக்
கணையாலே ... அம்பு போன்ற கண்களை உடைய பெண்கள் பேசும்
அவதூறு மொழிக்கு அஞ்சியும், காமன் எய்த தாமரைப் பூ அம்பினாலும்,

அன்றிற்கும் அனல் தென்றற்கும் இளைத்து அந்திப்
பொழுதில் பிறையாலே ... அன்றில் என்னும் பறவைக்கும், தீயை
வீசும் தென்றல் காற்றுக்கும் இளைத்து, மாலை நேரத்தில்
வந்துள்ள பிறைச் சந்திரனாலே,

எம் பொன் கொடி மன் துன்பக் கலன் அற்று இன்பக் கலவித்
துயர் ஆனாள் ... எமது கொடி போன்ற மகள் அணிந்திருக்கும்
துன்பத்தைச் செய்யும் ஆபரணங்களை அகற்றி, இன்பத்தைத்
தரும் உன்னுடன் கலப்பதையே நினைவாகத் துயரம் கொண்டுள்ளாள்.

என் பெற்று உலகில் பெண் பெற்றவருக்கு இன்பப் பு(ல்)லி
உற்றிடலாமோ ... எதை வைத்துக்கொண்டு இப்பூமியில் பெண்ணைப்
பெற்றவர்களுக்கு இன்பத்தை அடைந்து இருத்தல் வாய்க்குமோ?

கொம்பக் கரி பட்டு அஞ்சப் பதுமக் கொங்கைக் குறவிக்கு
இனியோனே ... தந்தங்கள் உள்ள யானை (விநாயகர்) எதிரில்
தோன்றினதால் அஞ்சிய, தாமரை அரும்பு போன்ற மார்பகத்தை
உடைய, குறப் பெண்ணாகிய வள்ளிக்கு இனியோனே,

கொன்றைச் சடையற்கு ஒன்றைத் தெரியக் கொஞ்சித்
தமிழைப் பகர்வோனே ... கொன்றை மலர் அணிந்த சடையுடைய
சிவபெருமானுக்கு ஒப்பற்ற அந்த பிரணவப் பொருளை விளக்கமாகத்
தெரியும்படி கொஞ்சித் தமிழில் கூறியவனே,

செம் பொன் சிகரப் பைம்பொன் கிரியைச் சிந்தக் கறுவிப்
பொரும் வேலா ... செம் பொன் சிகரங்களை உடைய, பசுமையும்
அழகும் பெற்ற கிரெளஞ்ச மலை குலைந்து அழியும்படி, சினம்
கொண்டு சண்டை செய்த வேலனே,

செம் சொல் புலவர்க்கு அன்புற்ற திருச்செந்திற் குமரப்
பெருமாளே. ... செம்மையான சொல்லுடைய புலவர்கள் பால் அன்பு
கொண்ட, திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே.

No comments: