Tuesday, February 05, 2013

துளசி (Ocimum sanctum)

மூலிகைகளின் அரசியாக போற்றப் படுகிறது. துளசியை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பலரது வீடுகளின் கொல்லைப் புறத்தில், துளசிமாடம் அமைந்துள்ளதை இன்றுகூட நாம் காணலாம்.

துளசியானது இடியைத் தாங்கும் சக்தி கொண்டது என அறிவியல் அறிஞர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர். இதனால் தானோ என்னவோ வீடுகளில் துளசி வளர்த்திருப்பார்கள் என தோன்றுகிறது.


துளசியின் மணம் உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது.இதற்கு அரி, இராமதுளசி, கிருஷ்ண துளசி, திருத்துளாய், துளவு, குல்லை, வனம், விருத்தம், துழாய், மாலலங்கர் என பல பெயர்கள் உண்டு.


துளசி இந்தியா முழுவதும் காணப்படும் செடி வகையாகும். இதில் நற்றுளசி, செந்துளசி, நாய்த்துளசி, நிலத்துளசி, கல்துளசி, முள்துளசி, கருந்துளசி என பல வகைகள் உள்ளன.


துளசியை பொதுவாக தெய்வீக மூலிகை என்றே அழைப்பார்கள்


கற்ப மூலிகைகளில் இதற்கு தனிச்சிறப்பு உண்டு

இந்து மதத்தினர், இலட்சுமி தேவியின் அம்சமாகவே எண்ணி இதனை வழிபடுகின்றனர்.

துளசியின் பயன்கள்

·
இருதயம், ரத்த நாளங்கள், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றை பலப்படுத்தும் தன்மையும் ரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மையும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீர்படுத்தும் தன்மையையும் கொண்டது.

·
துளசி உடல் சூட்டை சீரான நிலையில் பாதுகாக்கிறது.

·
நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

·
மன அழுத்தத்தைப் போக்கும்தன்மை கொண்டது.

·
உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது.

·
இருமல் மற்றும் சுவாச நோய்களுக்கு அரு மருந்தாக பயன்படுகிறது.

·
கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது.

·
ஜூரத்தைக் குறைக்கும் குணம் கொண்டது.

·
வயிற்றுப் புண், வாய்ப்புண்களை குணப் படுத்தும்.துளசியை கற்ப முறைப்படி தினமும் சாப்பிட்டு வந்தால் நோயில்லா பெருவாழ்வு வாழலாம்.


குழந்தைகளுக்கான மார்புச்சளி நீங்க
துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் கற்பூரவல்லி சாறு கலந்து சூடாக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் மார்புச்சளி, மூச்சு விட முடியாமை, சளியினால் மூச்சுத்திணறல் போன்றவை நீங்கும். மார்புச்சளி வெளியேறும்.


துளசிச் சாறுடன் எலுமிச்சை சாறு சம அளவு சேர்த்து அதனுடன் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்வு நீங்கி உடல் புத்துணர்வடையும்.


பெண்களுக்கு
துளசியிலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறியபின் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் 1 தேக்கரண்டி எடுத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (இரத்தப் போக்கு) குணமாகும்.


ரத்த அழுத்தம் குறைய
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி இலை, முற்றிய முருங்கை இலை சம அளவு எடுத்து இடித்து 50 மி.லி அளவு சாறில் 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை என இருவேளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் குறையும். இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.


உடல் எடை குறைய
துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து, உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும்.


குப்பைமேனி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.


இந்த சூரணத்தை தினமும் இருவேளை, வேளைக்கு இரண்டு சிட்டிகை என எடுத்து நெய்யில் குழைத்து தொடர்ந்து உட்கொண்டால் மூலச்சூட்டினால் ஏற்படும் கருப்பு நிறம் மாறும்.


அம்மான் பச்சரிசியுடன், துளசி இலை சம அளவு எடுத்து நன்கு அரைத்து பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.


துளசி இலை – 9 எண்ணிக்கை
கடுக்காய் தோல் – 5 கிராம்
கீழாநெல்லி – 10 கிராம்
ஓமம் -5 கிராம்
மிளகு – 3எடுத்து மைபோல் அரைத்து மோரில் கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவந்தால், சாம்பல், மண் தின்னும் குழந்தைகள் எளிதில் அவற்றை ஒதுக்கும்.


தொண்டைக்கம்மல், வலி நீங்க
தினமும் துளசியிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால், சளி, தொண்டைக்கட்டு நீங்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையும் நீக்கும்.

10
துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி கஷாயம் செய்து சூடாக அருந்தி, பிறகு சிறிது எலுமிச்சை சாறு அருந்திவிட்டு நல்ல கம்பளி கொண்டு உடல் முழுவதும் போர்த்தி விட்டால் மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.


சிறுநீரகக் கல் நீங்க
துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கல் படிப்படியாக கரையும். இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷநீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.


சிறு சிறு பூச்சிக் கடிகளின் விஷம் நீங்க
கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு பூச்சிக் கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும். அல்லது வேறு வகைகளில் பாதிப்பு ஏற்படும். இந்த பூச்சிகளின் விஷத்தன்மை நீங்க துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச் சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்.


வாய்ப்புண் , வாய் நாற்றம் நீங்க
வயிற்றில் புண்கள் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும். இதனால் வாய் நாற்றம் வீசும். வாய்ப்புண் ஆற துளசி இலையை பறித்து நீர்விட்டு அலசி, வாயில் வைத்து மென்று மெல்ல மெல்ல சாறினை உள்ளிறக்கினால், வாய்ப்புண் வயிற்றுப்புண் ஆறும். வாய் நாற்றமும் நீங்கும்.


மன அழுத்தம் நீங்க
மன அழுத்தத்தைப் போக்கும் குணம் துளசிக்கு உண்டு. துளசி இலையை நன்கு மைபோல் அரைத்து அதனுடன் வில்வ இலை சாறு சேர்த்து லேசாக சூடாக்கி அருந்தினால் மன அழுத்தம் நீங்கும்.


பற்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர
துளசி இலை, புதினா இரண்டையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் கிராம்புப் பொடி சேர்த்து தினமும் பல் துலக்கி வந்தால், பற்களின் சொத்தை, பல் ஈறு வீக்கம் மேலும் பற்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.


தலைவலி தீர
ஒரு கைப்பிடி துளசி இலை மூன்று மிளகு, 1 துண்டு இஞ்சி எடுத்து நன்கு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.

 
கண்நோய்கள் தீர
துளசி இலை ஊறிய நீரை 1 மண்டலம் அருந்தி வந்தால் முக்குற்றங்களில் ஒன்றான பித்த அதிகரிப்பு குறையும். இதனால் கண் நரம்புகளின் சூடு குறைந்து நரம்புகள் பலப்படும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது.


சரும நோய்கள் நீங்க
தேமல், படை உள்ள இடங்களில் துளசியும் உப்பும் சேர்த்து அரைத்து பூசி வந்தால் சரும நோய்கள் நீங்கும்.துளசி இலைக்கு உள்ளத்தைத் தூய்மையாக்கும் குணமும் உண்டு.
 

நம் தமிழ்மொழி

 ஆங்கிலேயன் நம் நாட்டை விட்டுப்போய் 64 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவன் நம்மை பல நூறு வருடங்கள் ஆண்டது பெரிய விஷயம் அல்ல. ஆனால், நம் மனதில் நம் கலாச்சாரம், பண்பாடு, மொழி இவை எல்லாமே மிகவும் தாழ்வானது என்றும், அதில் பெருமை கொள்ள ஏதும் இல்லை என்றும் ஒரு மனநிலையை ஏற்படுத்திவிட்டானே... அது தான் கொடுமை.

இந்த மனோ நிலை தலைமுறை தலைமுறையாக நம் மனதில் வேரூன்றிவிட்டது. இதனால் தான் நம்மை நினைத்து நமக்கு பெருமையும் இல்லை.... மகிழ்ச்சியும் இல்லை. நம்மூரில் சில வீடுகளில் ஒரு குழந்தை தன் அம்மாவை "மம்மி" என்று தான் கூப்பிடுகிறது , மம்மி என்றால் பதப்படுத்தப்பட்ட பிணம் என்பது தெரியாமல். நாம் நம் மொழியை, அடையாளத்தை, கலாச்சாரத்தை மெல்ல மெல்ல இழந்து வருகிறோம் என்பதற்கு இந்த ஒரு சான்று போதாதா ?ஆயினும், ஓர் ஆச்சரியம் என்னவென்றால் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் பிறந்ததாகச் சொல்லப்படும் நம் தாய்மொழியாம் தமிழின் சிறப்பைப் பற்றி நமக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். அயல் நாட்டவர்க்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. கிரெம்ளினில் உள்ள ரஷிய அதிபர் மாளிகையில் தமிழ்,ஆங்கிலம், ரஷியம், சீனம், என்று 4 மொழிகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஏன் என்று கேட்டதற்கு "ரஷிய மொழி எங்கள் தாய்மொழி. ஆங்கிலம் இன்று உலகத்தின் பல பகுதிகளில் பேசப்படும் மொழி. இன்னும் இரண்டு பழமையான மொழிகளில் வைக்க வேண்டும் என்று நினைத்தோம். கிரேக்கம், லத்தின், எபிரேயம், சமஸ்கிருதம், சீனம், தமிழ் ஆகியவை தான் உலகின் மிகப் பழமையான மொழிகள். அவற்றில் கிரேக்கம், லத்தின், எபிரேயம், சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. அதனால் பேச்சு வழக்கில் இருக்கும் தமிழிலும், சீனத்திலும் பெயர் பலகைகள் வைத்துள்ளோம்" என்று பதில் சொல்கிறார்கள்.நம் தமிழ்மொழி பழமையானது என்று கூறும் போது அது எவ்வளவு பழமையானது என்று கேட்டால் பெரும்பாலனவர்கள் 2000 ஆண்டுகள் என்று பதில் சொல்கிறார்கள். இது சரியான பதில் தானா ?நம் நாகரிகத்திற்கு வயது வெறும் 2000 ஆண்டுகள் அல்ல, சுமார் 10,000 ஆண்டுகள் என்று ஒரு கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது.நம்ப முடியவில்லையா ? இந்தியப் பெருங்கடலுக்கடியில் சற்று போகலாம் வாருங்கள்.தோராயமாக 15,000 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய இந்தியாவின் தென் பகுதி எப்படி இருந்தது என்று இந்த வரைபடத்தில் பார்க்கலாம்.இந்த வரைபடத்தில் இந்தியாவின் தெற்குப் பகுதியில், அதாவது இன்றைய குமரிமுனையில் இருந்து தெற்கே வெகு தூரம் நீள்கிறதே அந்தப் பகுதியைத் தான் குமரிக்கண்டம் என்று அழைக்கிறார்கள். இதன் பரப்பளவு 2300 மைல்கள் வரை இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இந்த மண் தான் நம் மூதாதையர்கள் பிறந்த மண்ணென்றும், இதை லெமூரியா கண்டம் என்றும் சில பேர் அழைக்கிறார்கள். இந்தப் பகுதியை , முதலில் காய்சினவழுதி பாண்டியன் என்ற மன்னன் ஆண்டான் என்றும், இதன் தலை நகரம் தென்மதுரை என்றும் , இதில் ஏழுபனைநாடு, ஏழு தெங்கு நாடு, ஏழு முன்பாலைநாடு, ஏழு பின் பாலைநாடு, ஏழுமதுரை நாடு, ஈழநாடு, நாக நாடு, பெருவள நாடு, ஒளிநாடு என்று 49 நாடுகள் இருந்ததாகவும், பஃறுளி , குமரி ஆகிய இரண்டு ஆறுகள் ஓடியதாகவும், குமரிமலை என்ற மலை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.கடந்த 2004 ஆம் ஆண்டில் தமிழகம், இலங்கை, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் சுனாமி (கடல் கோள்) ஏற்பட்டது நம் அனைவருக்கும் தெரியும் . அதே போல் சுமார் 10,000 - 15,000 வருடங்களுக்கு முன்பும் ஒரு கடற்கோள் ஏற்பட்டதாகவும், அதில் இந்தக் குமரிக்கண்ட நிலப்பகுதி அழிந்து போனதாகவும் நிலவியலாளர்கள் கருதுகிறார்கள்.இந்தக் கூற்றை மெய்ப்படுத்தும் விதமாக,

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி."என்ற சிலப்பதிகார வரிகள் சொல்லப்படுகின்றன.இது ஒரு புறமிருக்க, தமிழ் மேல் இருந்த அளப்பரிய பற்றினாலும் , பக்தியாலும், பாண்டிய மன்னர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள் என்றும், முதல் சங்க காலம் கி.மு 14,000 முதல் 9500 வரை நடந்ததாகவும், இதில் 89 பாண்டிய மன்னர்களும் , 4449 புலவர்களும் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த முதல் சங்கத்தில் பரிபாடல், முதுநரை, முதுகுருகு , பேரகத்தியம் உள்ளிட்ட நூல்கள் இயற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் திடீரென நிகழ்ந்த கடற்கோளால் பாண்டி நாடும் முழுமையாய் அழிந்து , தலைச்சங்க நூல்களும் அழிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.இதை அடுத்து “பாண்டிய மன்னன் கடுங்கோன்” என்பவன் கபாடபுரம் என்னும் நகரத்தை அமைத்து அதில் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தை அமைத்தான் என்றும், இதன் கால கட்டம் கி.மு 9,200 முதல் 5500 என்றும் கூறப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் தான் தொல்காப்பியர், கீரந்தையர் போன்ற பெரும் புலவர்கள் பல இலக்கியங்களை படைத்ததாகவும் கூறப்படுகிறது. வால்மீகிராமாயணம், வியாச பாரதம் போன்றவற்றின் மூலமாக கபாடபுரத்தைப் பற்றிய பல செய்திகளை அறிய முடிகிறது.

"இவ்வகை யரசிற் கவியரங்கேறினார்
ஐவகையரசர் ஆயிடைச் சங்கம்
விண்ணகம் பரவும் மேதகுகீர்த்திக்
கண்ணகல் பரப்பிற் கபாட புரமென்”
என்ற பழைய அகவற்பாவும் கபாடபுரத்தில் இடைச்சங்கம் இருந்த செய்தியைச் சுட்டுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தக் காலத்திலும் மீண்டும் ஒரு கடற்கோள் ஏற்படவே பாண்டிய நாடு அழிந்து போனதாகவும், இதில் தொல்காப்பியம் என்ற நூல் மட்டும் தப்பி பிழைத்ததாகவும் கூறப்படுகிறது.இதோடு நிற்கவில்லை.கபாடபுரம் அழிவுற்ற பிறகு பாண்டி நாட்டையும் தமிழ்ச்சங்கத்தையும் மறுபடியும் உருவாக்க எண்ணிய “முடத்திருமாறன்” என்னும் பாண்டிய மன்னன் தன்னாட்டிற்குள் கூடல் என்னும் மதுரை மாநகரை உண்டாக்கி மூன்றாம் தமிழ்ச் சங்கமான கடைச்சங்கத்தை உருவாக்கினான் என்றும் இந்தச் சங்க காலம் 1850 ஆண்டுகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சங்கத்தில் இயற்றப்பட்ட நூல்களான எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் தான் நம்மிடையே இருக்கின்றன.சுமேரியன் நாகரிகம் 4000 ஆண்டுகள் பழமையானது. சிந்து சமவெளி நாகரிகம் 5000 ஆண்டுகள் பழமையானது. ஆனால் குமரிக்கண்டமும் , குஜராத் மாநிலத்திலுள்ள துவாரகா நகரமும் குறைந்த பட்சம் 10,000 ஆண்டுகள் பழமையானவை என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.இதைப் பற்றி கிரகாம் ஹான்காக் என்ற இதழாளர் "UNDERWORLD" என்ற தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.இந்தியாவின் NIO(National Institute Of Oceanography) என்ற நிறுவனத்தின் தலைமையில் 1993 ஆம் ஆண்டில் நாகை கடற்கரையிலிருந்து 5 கி.மீ.தொலைவில் 70 அடி ஆழத்தில் 2 மீட்டர் உயரத்தில் "U" வடிவில் ஒரு வடிவம் இருப்பது ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டதென்றும், இந்த வடிவங்கள் சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சொல்கிறார். மேலும், இந்த வடிவத்தைக் கட்டுவதற்கு மிக உயர் ரக தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் ,இன்னும் நூறடி ஆழத்தில் பல வடிவங்கள் இருக்கலாம் என்றும் ஹான்காக் சந்தேகிக்கிறார். இதைத் தவிர இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களைத் தனது "Underworld" என்ற நூலில் தருகிறார் ஹான்காக்.இதெல்லாம் உண்மையாகும் பட்சத்தில் நம் நாகரிகம், குறைந்தது 10,000 ஆண்டுகள் பழமையானது என்பது உறுதியாகிவிடும். கலாச்சாரமே இத்தனை ஆண்டுகள் பழமையானது என்றால் நம் மொழி எத்தனை எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பதைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.இவை குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் செய்ய அரசு ஒத்துழைப்பும் ஆதரவும் நல்கினால் நம் நாகரிகம் பற்றிய பல உண்மைகள் வெளி வரும்.ஆனால் அது நடக்குமா ? தமிழன் தலை நிமிர்ந்து நிற்பானா ?