Monday, September 09, 2013

நீ இன்றி நான்

எப்படி எப்படியோ போயிருப்பேன்
நீ என் வாழ்வில் 
வராமல் போயிருந்தால்

சுற்றம் சூழ உன்னை பெண் பார்க்க வந்தபோது
மற்ற எல்லோரையும் நிமிர்ந்து பார்த்தாய்
நான் பார்க்கையில் நீ மண் பார்த்து நின்றாய்
தலை குனிந்து வந்தவளை
தாலி கட்டி மனைவி ஆக்கினேன்...

நீ மெட்டி சத்தம் கேக்காமல்
மெதுவாகத்தான் நடப்பாய்
உன் காது தண்டட்டியில்
என் மனம் குலுங்கும்...

நிறைமாத இடுப்பு வலியில் நீ துடிக்க
பொறுக்க முடியாமல்
இதய வலயில் நான் துடித்தேன்...

அந்த நொடியில்
நாத்திகனாய் இருந்த நான்
ஆத்திகனானேன்...
மருத்துவச்சி தெய்வம் ஆனாள்...

மூன்று பிள்ளைகள் பிறந்த பின்னும்
முதல் பிள்ளையாய் எனை பார்த்தாய்...

கழனிக்கு சென்று திரும்புகையில்
உன் களையான முகம் பார்த்தால்
களைப்பும் பறந்து போகும்...

எத்தனையோ பொழுதுகள்
இன்பத்தில் சிரித்தோம்
சில நேரம்
அழுதும் இருக்கிறோம்...

இன்று
வயித்தில் உதிச்சதுகள்
வளர்ந்து நிக்குது...

நடை தளர்ந்து விட்டது
நரை கூட விழுந்து விட்டது
இனி யாருக்கும் நாம்
தேவை இல்லை...

கை கோர்த்து நடந்த நாம்
தடி பிடித்து நடக்கிறோம்...

எனக்கு தெரியும்
இனி நாம் வாழும் நாட்கள் குறைவு...

நீ இறந்து நான் இருப்பதும்
நான் இறந்து நீ இருப்பதும்
இரண்டுமேவேண்டாம்...

இறப்பு என்ற ஒன்று இருந்தால்
இருவரும் இணைந்தே போவோம்
இம்மையிலும் மறுமையிலும்

இணைந்தே இருப்போம் ...

No comments: