Monday, September 23, 2013

தாய்மைத் தவம்

மணி மணியா முத்தெடுத்து
மாலையாய் கோர்த்தெடுத்தேன் 
கண்மணியே உனக்காக

வெள்ளியிலே சங்கெடுத்து
பசுந்தங்கத்துல வார்த்தெடுத்தேன் 
வெண்முகிலே உனக்காக

பட்டு நூலெடுத்து
பக்குவமா நெஞ்ஜெடுத்தேன்
பவளக்கொடியே உனக்காக

கற்பனையில் உருக்கொடுத்து
கனவுலதான் உயிர் கொடுத்து 
நித்தமொரு வண்ணங்கொண்டு
தேவதையா நீ வளர
பாத்திருந்த கண்ணுலதான்
பாலாறு கொட்டுதடி

பத்துமாசம் சுமந்திருந்தா
ஒரு பிரசவம் கண்டிருப்பேன்
கற்பனையில் உனச்சுமந்து
நிமிசமொரு பிரசவங்கண்டேன்

பாவிப்பய மக்களுக்கு
என் கனவத் தெரியலயே
பொத்திப் பொத்தி நான் வளத்த 
எம்மகளப் புரியலயே

புள்ளப்பேறு காணாம
பைத்தியமும் புடுச்சிடுச்சோ
மலடீன்னு சொல்லிச் சொல்லி
மண்ணுக்குள்ள தள்ளூம் 
இந்த உறவுக்கும் தெரியலயே

அம்மானு எனச் சொல்ல
கற்பனையில் நான் வளத்த 
செல்ல மக நீயிருக்க
உலகே அழிஞ்சாலும்
நம் உறவ யார் தடுக்க

முடுஞ்சி போச்சு இப்பிறவி
அடுத்த பிறப்பாச்சும் 
கற்பனையில் கண்ட உன்ன 
கையிலதான் ஏந்தவேணும்
கனவுலதான் வளத்த உன்ன
கண்ணால பாக்கவேணும்
மகவா கருவில் வந்து
மலடிப் பட்டம் தீரவேணும்.................

யோகநந்தினி
        ஈரோடு 

ஆராரோ பாட வந்தேன்

கருவாய் உனை உணர்ந்து
உருவாய் கண்டிட்ட காலம் முதல்
கண்ணே உன்னை காக்க
இமை எனத்தான் நானிருக்க
பயம் என்னப் பனிமலரே
பதறாமல் நீ உறங்கு

இரு கரங்கள் நான் பற்றி
பாதம் தான் அதை அசைத்து
நடைப் பழக்க நானுண்டு
சிந்தையிலே இதை கொண்டு
சினுங்காமல் நீ உறங்கு

ஏறத்துடிக்கும் உயரம் என்ன
இமயமலை தானும் என்ன
ஏணி என தான் மாறி
ஏற்றிவிட நான் உண்டு
எண்ணத்திலே இதை கொண்டு
ஏங்காமல் நீ உறங்கு

சந்தம் இல்லாப் பாட்டேனினும்
என் பந்தம் தான் உணர்த்தி
ஆராரோ பாட வந்தேன்
ஆணி முத்தே கண்ணுறங்கு
ஆராரோ ஆரிரரோ

ஆரிரரோ ஆராரோ


Nandhini Karthik (யோகநந்தினி)
                                    Erode

Sunday, September 22, 2013

உனக்காகவே நான்

வாழ்க்கை நெடுக வருவதாய் வாக்களித்தவளே .....

இன்று நீ கொடுத்த வலிகள் மட்டும் தானே
என்னோடு வந்து கொண்டிருக்கிறது.....

என் பெயரோடு உன் பெயரை
இணைத்து எழுதி ரசித்தாயே....

ஒன்றாய் அமரக்கூடாதென...
ஆசிரியர் தடுத்தும் அசராமல் அமர்ந்து
என் பொருட்டு அடி வாங்கினாயே......

எனக்கு வராத கணக்கு பாடத்தில்
நீயும் தோல்வி அடைந்து
துணை நின்றாயே ...

வகுப்பு மாணவிகளின் கேலி பேச்சிலும்
என் கரம் பற்றியே
வகுப்பில் அமர்ந்தாயே...

எனை விட்டு பிரியக்கூடாதென....
ஒரு முறை உறுதி மொழி கூட வாங்கினாயே......

அத்தனையும் மறந்து
எனை ஆறாத் துயரில் தள்ளியவளே....

உன்னையே நினைக்க வைத்து
என் உளன் மறந்து போனவளே ....

உன்னை தேடி..
உன் வாசல் ஏறிய போதெல்லாம்.....

உயிரை குடிக்கும் வார்த்தைகளால்
எனை கொன்ற பின்பும்...!
உனக்களித்த உறுதிமொழியின் படி....

இன்று வரை உன் நினைவோடு தானடி வாழ்ந்து வருகிறேன். ...

கவிதாயினி சத்யா