Monday, September 23, 2013

தாய்மைத் தவம்

மணி மணியா முத்தெடுத்து
மாலையாய் கோர்த்தெடுத்தேன் 
கண்மணியே உனக்காக

வெள்ளியிலே சங்கெடுத்து
பசுந்தங்கத்துல வார்த்தெடுத்தேன் 
வெண்முகிலே உனக்காக

பட்டு நூலெடுத்து
பக்குவமா நெஞ்ஜெடுத்தேன்
பவளக்கொடியே உனக்காக

கற்பனையில் உருக்கொடுத்து
கனவுலதான் உயிர் கொடுத்து 
நித்தமொரு வண்ணங்கொண்டு
தேவதையா நீ வளர
பாத்திருந்த கண்ணுலதான்
பாலாறு கொட்டுதடி

பத்துமாசம் சுமந்திருந்தா
ஒரு பிரசவம் கண்டிருப்பேன்
கற்பனையில் உனச்சுமந்து
நிமிசமொரு பிரசவங்கண்டேன்

பாவிப்பய மக்களுக்கு
என் கனவத் தெரியலயே
பொத்திப் பொத்தி நான் வளத்த 
எம்மகளப் புரியலயே

புள்ளப்பேறு காணாம
பைத்தியமும் புடுச்சிடுச்சோ
மலடீன்னு சொல்லிச் சொல்லி
மண்ணுக்குள்ள தள்ளூம் 
இந்த உறவுக்கும் தெரியலயே

அம்மானு எனச் சொல்ல
கற்பனையில் நான் வளத்த 
செல்ல மக நீயிருக்க
உலகே அழிஞ்சாலும்
நம் உறவ யார் தடுக்க

முடுஞ்சி போச்சு இப்பிறவி
அடுத்த பிறப்பாச்சும் 
கற்பனையில் கண்ட உன்ன 
கையிலதான் ஏந்தவேணும்
கனவுலதான் வளத்த உன்ன
கண்ணால பாக்கவேணும்
மகவா கருவில் வந்து
மலடிப் பட்டம் தீரவேணும்.................

யோகநந்தினி
        ஈரோடு 

No comments: