Sunday, July 07, 2013

என் ஆசைகள் வீண்தானா

கண்ணாடிப் பாத்திரத்தில்
கல்லேறுபட்டது போல் --- என்
எண்ணமெனும் தேன்கலசம்
உண்ணாமல் உடைந்திடுமா? --- இன்பக்
காவியம் பொய்தானா? --- கொண்ட
காதலும் பொய்தானா? --- என்
ஆசைகள் வீண்தானா? --- இனி
அமைதியும் காண்பேனா? (இன்ப)
இது
காலத்தின் செயல்தானா? --- சுகம்
கானல் நீர் தானா?
மன நம்பிக்கை வீண்தானா? --- நான்
வெம்பிய காய்தானா? (இன்ப)

இருள் மூடிய வான்போலே
கரை ஏறிய மீன்போலே
துயர்மீறிடும் நிலையாலே
படும் வேதனை தீராதோ? --- ஒரு
பாதையும் தோணாதோ? (இன்ப)

காதல்

உன்னழகைக் காட்டுதடி
எண்ணமெனும் தேன்கூட்டில்
இன்பக் கனல் மூட்டுதடி!

வான நிலாப்பெண்ணை
வட்டமிட்டு மேகமொன்று
மோன முகத்தினிலே
முத்தமிட்டுப் போகுதடி!

துள்ளிவிழும் நீரலையில்
வெள்ளிமலர் பூத்ததடி
வள்ளியுனை எதிர்பார்த்த
மெல்லுடலும் வேர்த்ததடி!

இல்லத்தில் நீயிருந்தால் 
இருள்வர அஞ்சுதடி
மெல்லத் தமிழ்உனது 
சொல்லில் வந்து கொஞ்சுதடி (மின்னும்)

சோகக் கதை

சுகவாழ்வும் ஒருநாளில்
பாதாளம் போகுமெனில்
பாரறிந்த உண்மையன்றோ?

சொல்ல முடியாத துன்பக் கதை
சூதாடி மனிதரின் சோகக் கதை
நல்ல மனிதரும் வஞ்சகராகி
கள்ள வேலைகள் செய்த கதை - சிலர்
கொள்ளை லாபத்தில் கொண்ட மோகத்தால்
உள்ளதும் இழந்து உருக்குலைந்த கதை (சொல்ல)

அந்த நாளிலே பஞ்ச பாண்டவர்
அரசு உரிமையை இழந்ததும்
அழகு பாஞ்சாலி அம்மையாருடன்
அனைவரும் காட்டில் அலைந்ததும்
அன்பு மேலிடும் நளன் தமயந்தி
அல்லல் சுமந்து வருந்தியதும்
அரிய காதலைப் பிரிய நேர்ந்ததும்
ஆதாரம் இழந்ததும் சூதாட்டத்தாலே (சொல்ல)

ஏழைகளின் புதுஉலகம் தெரியுதடா

வெங்கிமலை உச்சியிலே! - புது
வெற்றி நின்று அழைக்குதடா! - புகழ்
மங்கிக் கிடந்தவர்க்கே! - அங்கே
வாழ்க்கை இருக்குதடா!
பொங்கி ஓடும் வெள்ளமெல்லாம்
பள்ளத்திலே வீழ்ந்து வீணாய்ப்
போகுதடா! உள்ளம் வேகுதடா!
புறப்படடா! உடனே புறப்படடா!

பொறுப்புடன் உழைத்துழைத்து
வெறுப்படைந் திருப்பவனே!
வரப்பெடுத்த வயலமைத்து
வானம் பார்த்து நிற்பவனே!
புறப்படடா! உடனே புறப்படடா!

கூட்டம்: புறப்படுவோம்! உடனே புறப்படுவோம்!

மற்றவன்: ஓட்டு வீட்டு முருகப்பா!
ஓலைக்குடிசை மருதப்பா!
மேட்டுக்கொல்லை வேலப்பா!
வேப்பந் தோப்பு மாரப்பா!
மாட்டைப் புடிச்சிக் கட்டிப் போட்டு
வாங்கப்பா - நம்ப
மாணிக்கண்ணன் காட்டும் வழியில்
போங்கப்பா!

கூட்டம்: புறப்படுவோம்! சேர்ந்து புறப்படுவோம்!

ஒருவன்: ஈரமில்லா பாறைகளை
நொறுக்கிடுவோம்! - அணையை
எழுப்பிடுவோம்!
மரங்கள் போட்டுத்
தடுத்திடுவோம்!
ஏழைகளின் திசையிலதைத்
திருப்பிடுவோம் - தண்ணியை
ஏரிகுளம் வயல்நிறையப்
பெருக்கிடுவோம்!

கூட்டம்: புறப்படுவோம்! ஒண்ணாப் புறப்படுவோம்

ஒருபெண்: கருப்பாயி செவப்பாயி
காடக்குப்பம் வெள்ளையம்மா
அடி - காளியம்மா பக்கிரியம்மா
ஓடி வாங்கடி சிக்கிரமா
கதையும் கட்சியும் பேச இப்போ
நேரமில்லே - பொதுக்
காரியத்தில் இறங்கும்போது
பேதமில்லே!

பெண்கள்: புறப்படுவோம்! நாமும் புறப்படுவோம்!

ஒருவன்: கொடுமையையும் வறுமையையும்
கூடையிலே வெட்டிவை!

பெண்: கொஞ்ச நஞ்ச பயமிருந்தால்
மூலையிலே கட்டிவை!

ஒருவன்: நெடுங்கவலை தீர்ந்ததென்று
நெஞ்சில் எழுதி ஒட்டிவை!

பெண்: நெரிஞ்சிக் காட்டை அழித்து - அதில்
நெல்லு விதையைக் கொட்டிவை!

ஒருவன்: ஏழைகளின் புது உலகம் தெரியுதடா! - நாம்
ஏமாந்து வந்த நிலை ஒழியுதடா!

கூட்டம்: கட்டிடுவோம் - அணையைக் கட்டிடுவோம்!