Saturday, September 28, 2013

அசோலா வளர்ப்பும்- அதன் பயன்கள்


.அசோலா பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம். பெரும்பாலும் பச்சை அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனை மூக்குத்திச் செடி அல்லது கம்மல் செடி என்றும் அழைப்பர்.

இதில் புரதச்சத்து 25-35%, தாதுக்கள் 10-12% மற்றும் 7-10% அமினோ அமிலம் கார்போஹைட்ரேட் எண்ணெய் சத்துக்கள்.

தேவையான பொருட்கள்:
(6’X3’, தினம் 500கி-1 கிலோ உற்பத்தி செய்ய போதுமானது)
1. செங்கல் - 30-40 கற்கள்
2. சில்பாலின் பாய் - 2.5 மீ நீளம், 1.5மீ அகலம் () 6’X3’
3. செம்மண் - 30 கிலோ
4. புதிய சாணம் - 30 கிலோ
5. சூப்பர் பாஸ்பேட் - 30 கிராம் ()
அசோஃபெர்ட் - 20 கிராம்
6. தண்ணீர் - 10 செ.மீ. உயரம் (சராசரியாக 6-9 குடம்)
7. அசோலா விதை - 300-500 கிராம்
8. யூரியா சாக்கு - தேவையான எண்ணிக்கை (6’X3’ .அடியை நிரப்ப)

அசோலா வளர்ப்பு முறை:

இடத்தைத் தயார் செய்தல்:
1. மர நிழலில் (நேரடி சூரிய ஒளி ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது) இருக்குமாறு தேர்வு செய்ய வேண்டும்.
2. இடத்தின் அளவு 6’X3’ இருக்க வேண்டும்.
3. புல் பூண்டுகளை அகற்றி இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
4. இடம் குண்டும் குழியுமாக இல்லாமல் சம தளமாக்க வேண்டும்.
5. புல் பூண்டுகள் வளருவதை தடுக்க யூரியா சாக்கினை பரப்பவும்.

செய்முறை:
1. செங்கலை குறுக்கு வாட்டில் தயார் செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் வைக்க வேண்டும்.
2. அதன் மேல் சில்பாலின் பாயை பரப்பி விட வேண்டும்.
3. சில்பாலின் பாயின் மீது 10-15 கிலோ செம்மண்ணை சம அளவில் பரப்பி விட வேண்டும்.
4. தண்ணீரின் அளவு 10 செ.மீ உயரம் வரும் வரை சுமார் 6-9 குடம் ஊற்ற வேண்டும். ஊற்றுவது குடிநீராக இருக்க வேண்டும்.
5. புதிய சாணம் 2 கிலோ மற்றும் 20 கி அசோஃபெர்ட் () 30 கி சூப்பர் பாஸ்பேட் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
6. 500-1000 கிராம் சுத்தமான அசோலா விதைகளை போட்டு அதன் மேல் லேசாக தண்ணீர் தெளிக்கவும்.

வளர்ச்சி:
1. விதைத்த 3 நாட்களில் எடை மூன்று மடங்காக பெருகும்.
2. பசுந்தீவனம் 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும்.
3. 15 நாட்கள் கழித்து நாள் ஒன்றுக்கு 500 கிராமிலிருந்து 1 கிலோ வரை அறுவடை செய்யலாம்.

பராமரிப்பு:
1. தினந்தோறும் குழியிலுள்ள அசோலாவினை கலக்கி விட வேண்டும்.
2. தண்ணீன் அளவு 10 செ.மீ. க்குக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
3. 5 நாட்களுக்கு ஒரு முறை 2 கிலோ புதிய சாணம் மற்றும் 20கிராம் அசோஃபெர்ட் () 10 கிராம் ( ஒரு தீப்பெட்டி அளவு) சூப்பர் பாஸ்பேட் தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.
4. 10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை வெளியேற்ற வேண்டும். பதிலாக சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும்.
5. மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை வெளியேற்ற வேண்டும். பிறகு சுத்தமான சலித்த செம்மண்ணை இட வேண்டும்.
6. 6 மாதத்திற்கு ஒரு முறை அசோலா விதைகளை தவிர அனைத்து இடுபொருட்களையும் வெளியேற்றி புதியதாக இட வேண்டும்.

தீவனம் அளிக்கும் முறை:
1. தினமும் 500கிராம்- 1 கிலோ அசோலாவை எடுத்து நீரில் அலசிக்கொள்ள வேண்டும்.
2. பச்சையாகவோ அல்லது பதப்படுத்தியோ அல்லது அடர் தீவனத்துடன் கலந்தும் கொடுக்கலாம்.
3. உணவு உப்புடன் சேர்த்தும் அளிக்கலாம்.
4. வைக்கோலுடன் சேர்த்தும் அளிக்கலாம்.

பயன்கள்:
1. 1 கிலோ அசோலா 1 கிலோ புண்ணாக்கிற்கு சமம்.
2. அசோலாவை உட்கொள்வதால் பால் உற்பத்தி 15-20% அதிகரிக்கும்.
3. பாலில் கொழுப்பு மற்றும் கொழுப்பு அல்லாத சத்துக்கள் அதிகரிக்கிறது.
4. கோழிக்கும், வாத்திற்கும் தீவனமாக பயன்படுத்தலாம். அதிக எடை கிடைக்கும்.
5. உணவு உப்புடன் சேர்த்து பன்றிகளுக்கு அளித்தால் பன்றியின் எடை கூடுவதுடன் இறைச்சி தன்மையும் நன்றாக இருக்கும்.
6. முயல்கள் அசோலாவை விரும்பி உண்ணும்.
7. அசோலா வளர்க்கும் இடத்தில் கொசுத் தொல்லை இருக்காது.

வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள்

1. தண்ணீர்:
அசோலாவனது தண்ணீர் ஊற்றி வறண்டுவிட்டால் உடனே இறந்து விடுகிறது.

2. ஈரப்பதம்:
காற்றின் ஈரப்பதம் 85-90% இருக்கும்போது அசோலா நன்கு வளர்கிறது. ஈரப்பதம் 60%ற்கு குறையும்போது வறண்டு இறந்துவிடுகின்றது.

3. சூரிய ஒளி:
கோடைக் காலங்களில் பகல் நேரங்களிலுள்ள அதிக சூரிய ஒளி அசோலாவை பழுப்பு நிறமாக மாற்றிவிடுகின்றது.

4. காற்று:
வேகமாக வீசும் காற்றானது பாத்திகளிலுள்ள அசோலாவை ஒரு பக்கமாகக் கொண்டு சேர்த்துவிடும். இதனால் அசோலாவின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது.

5. மண்ணின் கார அமிலத் தன்மை:
காரத் தன்மையுள்ள மண்ணில் அசோலாவின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. நுண்ணூட்டச் சத்துக்களுக்கு ஏற்ப அசோலாவின் வளர்ச்சி மாறுபடுகின்றது.


Wednesday, September 25, 2013

வேகத்தடைகள்

எங்கிருந்து தான் வருமோ
அத்தனை வேகத்தடைகள்
நீயும் நானும் பேசிக்கொண்டு
இருக்கையில்

எப்போதும் பேசவே பேசாத
ஒருவன் அவசரம் யென்று
அலைப்பேசியில் அழைத்து
அடம்பிடித்து பேசிக்கொண்டே
இருக்கிறான்

பிறகு பேசுகிறேன் என்று
முடித்து உன் பக்கம்
திரும்புகையில் எவனோ
ஒருவன் வழிமறந்தவன்
நம்மிடையே உள்புகுந்து
முகவரி விசாரிக்கிறான்

தப்பு தப்பாக வழிச்சொல்லி
அவசரமாக அவனை
வழியனுப்பி விட்டு
மீண்டும் உன்னிடத்தில்
பேச ஆரம்பிக்கும் போது
சவாரிக்கு ஆள் பிடிக்கும்
ஆட்டோகாரன் ஒருவன்
சார் ஆட்டோ என்னும் போது
எனக்குள் ஏற்படும் எரிச்சலைக்
கண்டே சிரித்தே விடுகிறாய்

திரும்பவும் ஏதோ பேசிக்கொண்டு
இருந்தோமே என்று நான்
ஆரம்பிக்கையில் மொத்த பூக்களையும் உனக்காகவே
கட்டி எடுத்து வந்த மாதிரி
பூக்காரி ஒருத்தி நம்முன்
வந்து நின்றாள்

அவசரத்தில் பேரமே பேசாமல்
கொள்முதல் செய்து அவளையும்
வழியனுப்பி மீண்டும் உன்னுடன்
பேச தொடங்குகையில் நீ
சொன்ன வார்த்தையில்
எனக்கும் தான் பேச்சு
வரவே இல்லை

அந்த ஐஸ்கிரிம்காரனை
என்னை ஏன் கூப்பிட

சொன்னாய்!!!!!

வெங்கடேசன்  பாலகிருஷ்ணன் 
வேட்டவலம் 

காணி நிலம் வேண்டும்.

காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்;-அங்கு,
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்;-அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்

பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்?அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.

பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்
காவலுற வேணும்;என்தன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.


மகாகவி பாரதியார்.

புரியா புதிர்

குங்குமச்சிளையாய்
குமரித்தாயின் மகனாய்

காலை இளம் கதிரவனாய்
உன்  சிறகுகள் விரிந்து
எழுகின்ற போதும்

முழு மதியழகனாய்    
உன் உடல் மண்ணில்
மறைகின்ற போதும்

அமைதியின்
பிறப்பிடமாய்
திகழ்கின்றாய் ஆனால்

இவ்விரண்டிற்கும்
இடைப்பட்ட வேளையில்
எப்படி வந்தான்

அந்த அசுரன்
தீ ..பிலம்புகளாய் 

Monday, September 23, 2013

பெண்

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் 
பிறருக்காய் அளித்து வாழும் ஓர் இனம் 

பிறப்பில் பால் வேறுபாடு தெரிதலில்லை 
வளர்ப்பில் அதைத் தவிர வேறு கற்பித்தலில்லை 

மகளாய் பணிந்து பல வருடங்கள்
அக்காளாய் ,தங்கையாய் பல விட்டுக் கொடுத்தல்கள்
மகனாகவும் சில கடமைகள்

தொடர்புகள் அற்ற தொடர்புகளாய் கடமைகள்
சோர்வின்றி தொடர
மஞ்சள் நாண் பிணைத்து ,மனைவி என 
புதுப் பெயரும் சூட்டி 
கரை காணா கடல் என கண்முன்னே 
விரியும் புதுக்கடமைகள்

அன்னையாய் அன்னமிடல் முதல்
தோழியாய் குறைகள் தீர்த்து
ஆசானாய் அறிவு புகட்டி
உடன் பிறந்தவளாய் அனுபவங்கள் சொல்லி
காலை முதல் மாலைவரை 
என்ன ஒரு வேகம் 
அவள் செயலிலும் எண்ணங்களிலும்

எல்லோருக்கும் எல்லா நேரங்களையும்
பகிர்ந்தளித்து விட்டால் அவளுக்கான
நேரம் எது ஏது?

அவளுக்கான கடமைகளை செய்யவும் 
அவளின் குறைகளை பகிரவும்
சந்தோசங்களை சிலாகிக்கவும்
அவள் அறிவை உணரவும் உணர்த்தவும்
உருவேற்றவும்
இன்னும்...........................?
எல்லாம் ஒரு பதில்கள் அற்ற கேள்விக்குறிகளோடு 
முற்றுப் பெறுகிறது வெகு முன்காலம் முதல்!!!!

பெண்ணை தெய்வமாய் ,அன்னையின் அழகாய் 
பார்க்கும் சில கோடி உயிர்கள்
பழிகாரியாய், துரோகியாய் ,போதை தரும் பேதையாய் 
பார்க்கும் பல கோடான கோடி உயிர்கள்
பெண்ணையும் உணர்வும் , உயிரும் உள்ள 
சக மனுசியாய் பார்க்கும் கண்களையும் உள்ளத்தையும் 
காண முடிந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும்

யோகநந்தினி)
ஈரோடு