Tuesday, February 04, 2014

பழைய பார்வைகள்

கரங்கள் பற்றி
கடைசியாய் எச்சில் படுத்தாமல்
முத்தமிட்டு கரைந்தபடி
விடைபெற்ற நாளில்
கலைந்து போனதா
உன் விழிகளில் வாழ்ந்த
காதல் மூலாம் ?

இப்போது எதிர்படுகையில்
தென்படுவதில்லை
பழைய பார்வைகள் '
திருவிழா முடிந்த ஆலய வளாகமாய்
சோபை இழந்து கிடக்கிறது கண்கள்

சோகம் சோடித்தமுகத்தொடு
உன்னை காண்கையில் எல்லாம்
கொழு அறுத்த புழுவாய் துடிக்கிறேன்

செவ்விந்திய இனம்போல
உன் சிரிப்பு அழிந்தே போனதடி

நீ இல்லாத தோல்வியை
புன்னகை வேசம் அணிந்தே ஊருக்கு
சரமாரியாய் சமாளிக்கிறேன்

ஒருவார்த்தை பேசமாட்டாயா ?
என துடித்தாலும்
உன் சந்தேக புருஷன் பற்றி
அறிந்திருப்பதால்
அந்த சலனமான ஆசையை நிறுத்தி விடுகிறேன் ...

ஒருநாள்
என்னை கடந்த ஒரு நொடியில்
என் பெயர் சொல்லி அழைத்தாய் .
பட்டாம் பூச்சிகள் இதயத்தில்
சிறகடிக்க திரும்பி பார்த்தேன் .

நடை பாதை விட்டு
வீதிக்கு ஓடிய உன்
கடைசி பிள்ளையை துரத்தி
பிடித்தபடி நீ என்னை கவனிக்க வில்லை ...

உன் இறுதி வரைக்கும்
என் பெயரை உச்சரிக்க வேண்டும்
என்ற ஆசையில்
உன் பிள்ளைக்கு என் பெயரை சூட்டி இருக்கிறாய்
என்பதை நான் அவதானித்தேன் ...

நானும் வேற்றூர் போக தீர்மானம் செய்திருக்கிறேன் ...
என்னை உன் கண்களில் வீழ்த்துவதால் தானே
இன்னும் உன் காயங்கள் ரணமாகின்றன
அதற்காகவே ...

வாகை காட்டான்

No comments: