Wednesday, November 27, 2013

வந்து நீயும் சேர்ந்து விடு

ஆத்து தண்ணீ ஊத்து தண்ணீ

அத்தனையும் வத்திருச்சே_

ஆனா நா வடிக்கும்

கண்ணீரு வத்தலையே.....


சொத்து சுகம் கேக்கலியே

சோறு தண்ணீ கேக்கலியே _

உன் ஒத்த‌ சொல்லு

கேட்டிடவும் கூடுலியே......


ஊர‌ நா நம்புலியே

என் உள்ளத்தையும் நம்புலியே

உன்னை தானே நம்பினேனே

உள்ளுக்குள்ளே இப்ப‌ வெம்பினேனே.......


மண்ணுலையும் ஆசையில்லை அட‌

பொன்னுலயும் ஆசையில்லை

உன் ஆசைமுகம் பாத்திடத்தான்

ஆயுசுக்கும் ஆசைப்பட்டேன்.....


கண்ணுதான் பட்டுருச்சோ

கால நேரம் கெட்டிருச்சோ

உன் பொன்னு மனம் வாடிப்போக‌

நா பொலம்பி தவிக்கிறனே......


பொங்கி வச்ச‌ சோறும்

புடிச்சு வச்ச‌ நீரும்

என் தொண்டை நனைக்கிலியே

என்வயித்துக்கும் இப்போ பசிக்கலியே.......


ஆருனா ஆரிடுமா

அத்தனையும் மாறிடுமா?.....

யாரோ சொல்லிருந்தா

ஆருதலா நீயிருப்ப‌.....

நீயே சொன்னதால‌

நாதியத்து நானிருக்கேன்.....


வேலை செய்ய‌ தோணிலியே

வேதனையை சொல்லிடவும் ஆளில்லையே _

மனம் புழுங்கி சாகுறனே

புத்தியின்றி வாடுரனே.......


மாலக் கருக்கலிலும்

அந்த‌ மையிருட்டுவேளையிலும்

பேசிக் களித்த‌ கதை

என் நெஞ்சுகுழி பொசுக்குதடா.....


உறவா நீயிருந்தா உதறி விட்டிருப்பேன்....

உசுரா நீயிருக்க உன்ன‌ விட்டுபுட்டு

எப்படி நான் வாழ்ந்திடுவேன்?.........


அட‌ சாட்சி தேவையில்லை

நீ தந்த‌ சத்தியமும் மெய்யிலையோ...

பாலும் திரிஞ்சிருச்சோ

உன் பாசமும் மாறிடுச்சோ.....


உசுர‌ உருக்கி நா

என் உள்மனச‌ சொல்லிபுட்ட

காலம் கடத்தாத‌...

என் கனவை கலைக்காத....


ஓடி நீ வந்து விடு

ஒத்த‌ சொல்லு பேசிவிடு

வாடி நா நிக்கிறனே

வந்து நீயும் சேர்ந்து விடு......


காலந்தான் மாறிடுமா _உன்

கனிவு மொழி கேட்டிடவும்....

நேரம் தான் விடிஞ்சிருமா _உன்

நேச‌ முகம் பாத்திடத்தான்......

திக்குத் தெரியாத காட்டில்-உனைத் தேடித் தேடி இளைத்தேனே.

திக்குத் தெரியாத காட்டில்-உனைத்
தேடித் தேடி இளைத்தேனே.

மிக்க நலமுடைய மரங்கள்,-பல
விந்தைச் சுவையுடைய கனிகள்,-எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள்,-அங்கு
பாடி நகர்ந்து வரு நதிகள்,-ஒரு (திக்குத்)

நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள்,-எங்கும்
நீளக் கிடக்குமலைக் கடல்கள்,-மதி
வஞ்சித் திடுமகழிச் சுனைகள்,-முட்கள்
மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள்,-ஒரு (திக்குத்)

ஆசை பெறவிழிக்கும் மான்கள்-உள்ளம்
அஞ்சக் குரல் பழகும்,புலிகள்,-நல்ல
நேசக் கவிதைசொல்லும் பறவை,-அங்கு
நீண்டே படுத்திருக்கும் பாம்பு,-ஒரு (திக்குத்)

தன்னிச்சை கொண்டலையும் சிங்கம்-அதன்
சத்தத் தினிற்கலங்கும் யானை-அதன்
முன்னின் றோடுமிள மான்கள்-இவை
முட்டா தயல்பதுங்குந் தவளை-ஒரு (திக்குத்)

கால்கை சோர்ந்துவிழ லானேன்-இரு
கண்ணும் துயில்படர லானேன்-ஒரு
வேல்கைக் கொண்டுகொலை வேடன்-உள்ளம்
வெட்கங் கொண்டொழிய விழித்தான்-ஒரு (திக்குத்)

‘பெண்ணே உனதழகைக் கண்டு -மனம்
பித்தங் கொள்ளு’ தென்று நகைத்தான்-”அடி
கண்ணே,எனதிருகண் மணியே-உனைக்
கட்டித் தழுவமனங் கொண்டேன். (திக்குத்)

சோர்ந்தே படுத்திருக்க லாமோ?-நல்ல
துண்டக் கறிசமைத்துத் தின்போம்-சுவை
தேர்ந்தே கனிகள்கொண்டு வருவேன்-நல்ல
தேங்கள் ளுண்டினிது களிப்போம்.” (திக்குத்)

என்றே கொடியவிழி வேடன்-உயிர்
இற்றுப் போகவிழித் துரைத்தான்-தனி
நின்றே இருகரமுங் குவித்து-அந்த
நீசன் முன்னர்இவை சொல்வேன்; (திக்குத்)

அண்ணா உனதடியில் வீழ்வேன்-எனை
அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா-பிறன்
கண்ணாலஞ் செய்துவிட்ட பெண்ணை-உன்தன்
கண்ணாற் பார்த்திடவுந் தகுமோ?”

“ஏடீ,சாத்திரங்கள் வேண்டேன்-நின
தின்பம் வேண்டுமடி,கனியே!-நின்தன்
மோடி கிறுக்குதடி தலையை,-நல்ல
மொந்தைப் பழையகள்ளைப் போல”

காதா லிந்தவுரை கேட்டேன்-‘அட
கண்ணா’வென் றலறி வீழ்ந்தேன்-மிகப்
போதாக வில்லையிதற் குள்ளே-என்தன்
போதந் தெளியநினைக் கண்டேன்.

கண்ணா!வேடனெங்கு போனான்?-உனைக்
கண்டே யலறிவிழுந் தானோ?-மணி
வண்ணா! என தபயக் குரலில்-எனை
வாழ்விக்க வந்த அருள் வாழி!

Sunday, November 10, 2013

ஒரு தாயின் குமுறல்

காலேஜு போன மக
காணாம போயி ட்டாளே
கடுதாசி எழுதி வச்சு
காதலனோட
போயிட்டாளே ,

பாத்து பாத்து
வளர்த்த மக
பாதியில போயிட்டாளே
கொல்லாம ஏ உசுர
கொன்னுபுட்டு போயிட்டாளே ...

சந்தையில நிக்கவைச்சு
சாதிசனம் ஏசுதே
கலங்காத என் ஐய்யனாரு
கண்ணீரோட நிக்குதே

படுபாவி எங்க போன ,
என் பாவிமக எங்க போன
பெத்தெடுத்த பாவத்துக்கா
சொல்லாம கொள்ளாம
ஓடி போன ?

காலுல முள்ளு குத்தி
கிழிச்சாலும் உழைச்செனே
உங் -கலியாண காசு சேக்க

கா வயிறா கெடந்தேனே !

உங்கப்பன்கிட்ட உதவாங்கி
காலேஜு சேத்தேனே ...
நீ காதலிச்சு ஒடுவன்னு
கனாக்கூட காணலியே ....

பட்டணத்து புள்ள மாதிரி
பந்தாவா நீ போக
பட்டிக்காட்டு பொம்பள நான்
பாத்து பாத்து பூத்தேனே ....

பட்ட வலி மறக்குமே
பருவமக உன் சிரிப்புல
இப்ப
பட்டமரம் ஆயிபுட்டேன்
பாவி மக உன் நடப்புல ....

மொரட்டு மாப்பிள்ளையும்
மூத்தவள வெரட்டிபுட்டான்
மூணாவது தங்கச்சியும்
மூலையில ஒதுங்கிப் புட்டா ,
எப்படி நான் கர சேப்பேன்
ஏ..மாரியாத்தா வழிகாட்டு
ஏ மக மேல பட்ட கறைய
காலபோக்கில் நீ மாத்து..

பிடிவாதம் பிடுச்சிருந்தால்
பிடிச்சவனோட சேத் திருப்பேன்
புரியாம போயிட்டாயே..
ஏம் மனச புண்ணாக்கி
போயிட்டாயே....

உன்னபத்தி நினச்சயே
உடன்பிறப்ப நினைச்சயா?
நீ படிக்க பாடுபட்ட,அவ பாசவலி ,மறந்தயா ?
வாழ்வெல்லாம் கஷ்டப்பட்ட
அவளுக்கு இனி வாழ்க்கை கிடைக்குமா ?
உன் ஓடுகாலி தனத்துக்கு
ஏந் குடும்ப மொத்தம் இரையாகுமா?

உன்ன நினச்சு அழுவேனா ?
உன் சிறுச நினைச்சு அழுவேனா ?

ஏம் புள்ள
இப்படி செஞ்ச ...
என ஏமாத்தி தள்ளி நின்ன ...

தலையெல்லாம் வலிக்குதே
என் தலைஎழுத்து
வாழ்க்கையே தாறுமாறா கிடக்குதே ...

என் செல்ல மக அவ
சீரோட இருப்பாளோ ,சிரிப்போடு இருப்பாளோ ?
சின்னா பின்னமாகி சிதைஞ்சு தான் போவாளோ ...

தட்டிகேக்க ஆளு இல்லாம
தடுமாறி போவாளோ ?
நான் இல்லாம எம்புள்ள
நடுங்கித்தான் போவாளோ ?

மெத்த பிடுச்ச மாமியாரு
மகளாட்டம் நடத்துவாளோ ?
இல்ல ,
மேனியெல்லாம் வதங்க
வேல வெட்டி தருவாளோ ?

ஏ குலசாமி காப்பாத்து ...
என் குழந்தைய காப்பாத்து...

பக்கத்து வீட்டு வசந்தாக்கா
பலதடவ சொன்னாலே
நம்பாம இருந்தேனே ,
என் நம்பிக்கையில் மண்ணபோட்டா ..

ஒருதடவ சொல்லி இருந்தா
அவனப்பத்தி விசாரிச்சுருப்பேன் ...
இப்படி கண்டத எண்ணி
கவலைப்பட்டு கிடக்க மாட்டேன் ...

கொன்னு புட்டு போயிருந்தா
நிம்மதியா போயிருப்பேன் ,
கொத்துயிரும் கொளுயிருமா
கிடக்கவச்சு போயிட்டயே...

பிறக்கும் போது
தந்தது எல்லாம் வலியேஇல்ல
இப்ப நீ தந்த வலி அதவிட அதிகமடி

எல்லாத்தையும் சொல்ற மக
ஏண்டீ இத சொல்லல ,
இந்த அம்மா நினைப்பு
அப்ப உனக்கு எப்புடி புள்ள வரல ...

உன்ன ஒழுங்கா வளக்கலன்னு
ஊரு சனம் பேசுது ..
உன்னையும் என்னையும் பத்தி
கூசாம கூவுது ....
உன்ன தட்டி கேக்க முடியாம
பாசம் வந்து தடுக்குது ...
பசி பொறுக்காத பச்ச மக
சாப்பிட்டையோனு
நெஞ்சுக்குள்ள தவிக்குது ....

சமுதாயம் மாறலையே ....
சாதிசனம் மாறலையே ....
காதலுக்கு எதிரியில்ல
கலியாணத்த தடுப்பவயில்ல ...
நான் பாத்து
செஞ்சுவச்சா .,
நகநட்டு போட்டுருப்பேன் ....
நீ பாத்து செஞ்சுகிட்ட
என்னடி உனக்கு நான் செய்வேன் ?

ஓடி போகும் பிள்ளைகளே
ஒரு நிமிஷம் கேளுங்களேன் ,,,
உங்க தாய்முகத்த பாத்தாவது ,முடிவ கொஞ்சம்
மாத்துங்களேன் .....
உங்கள நல்ல படியா வளத்தவங்க
நம்பிக்கைய கொல்லாதீங்க.....
நாலு பேரு மதிக்கும் படி நல்ல வாழ்க்கை
தருவாங்க ......

காசு பணம் போயிருந்தா
கஷ்டப்பட்டு சேத் திருப்பேன் ....
என் கன்னுகுட்டி
போயிடுச்சே ...
எங்க போய் நான் பாப்பேன் .....?

Saturday, November 09, 2013

களையிழந்த கிராமியக் கலைகள்

களையிழந்த கிராமியக் கலை
கலங்கி நிற்கும் மக்கள் கதை
கேளுங்கய்யா எங்க கதை
பாடிபுட்டோம் சோகக்கதை

ஆடிப்பாடி வளர்த்தகலை -இப்போ
அடியோடு அழியும் நிலை
அவலத்தில் எங்க நிலை
அறிந்திடுவீர் அவல நிலை

பாடிப்பாடி வளர்த்தகலை - இப்போ
படிப்படியா அழியும் நிலை
பரிதவிப்பில் எங்க நிலை
பட்டினியில் சாகும் நிலை

நயமாய் வளர்த்த கலை - இப்போ
நலிவடைந்து நிற்கும் கலை !
நாட்டத்தோடு வளர்த்த கலை
நாதி யற்று நிற்கும் கலை!

கரகாட்டம் கட்டி நின்னா
கிறங்கி நிற்கும் ஊருசனம் - இப்போ
பசியிலே கிறங்கி நாங்க
பரிதவித்து நிற்கிறோமே !

மயிலாட்டம் ஆடி நின்னா
மதி மயங்கும் ஊருசனம் - இப்போ
மறித்து போக மனமின்றி
மயங்கி நாங்க நிற்கிறோமே!

தப்பாட்டம் ஆடிபுட்டா
தாறுமாறா கூடும் கூட்டம்
கொண்டாண்டம் போட்ட கூட்டம் -இப்போ
படும் பாடோ திண்டாட்டம் !

தென்மாங்கு பாடிபுட்டா
தெருவே கூடிநிற்கும் - இப்போ
தேடுவார் யாருமின்றி
தெருவிலே நிற்கிறோமே !

மெட்டு கட்டி பாடிபுட்டா
பட்டி தொட்டி ஆடுமடா - இப்போ
பச்சபுள்ள பட்டினியா
தொட்டிலிலே ஆடுதடா!

கூத்துக்கட்ட ஆளிருந்தும்
கூடுவார் யாருமில்ல !
பாட்டுக்கட்ட ஆளிருந்தும்
பசி தீர்க்க யாருமில்ல !

சின்னத்திரை வெள்ளித்திரை
சேர்ந்து செய்த சதிவலை
ஆனதய்யா திரை சீலை
போனதய்யா எங்க வேலை

பாட்டன் பூட்டன் காலம் தொட்டு
பரம்பரையா வளர்த்த கலை - இப்போ
பட்டினத்தார் பாதம் தொட்டு
நிற்கிறோமே வெக்கம் கெட்டு

தெருவிலே கூத்துக் கட்டி
தென்மாங்கு பாட்டுக்கட்டி
படிச்சவன் பாடு -இப்போ
நடுத்தெருவில் நிக்குதய்யா !

வயிற்ரை கட்டி வாயை கட்டி
கலை வளர்த்த குடும்பமெல்லாம்
கழுத்துல கயிறைக் கட்டி
தூக்குல தொங்குதய்யா!

ஆயர்கலை அறுபத்தி நான்கும்
அழிகின்ற அவல நிலை
அழியாத கலையாக என்றும்
நிலை வாழ துணை செய்வீர் !

source
http://eluthu.com/kavithai/154571.html